இளமைப் பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும் (Childhood) முழு வளர்ச்சிப்பருவத்திற்கும் (Fullmanhood) இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் (physical strength and energy) கொண்ட பருவமாகும்; வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்றிறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தைப் பயன்படுத்திக் கொள்ளாதவன் வளமான வாழ்வுக்கு உரித்துடையவனாவது சாத்தியமானதன்று. இதனாலேயே முதுமை வரும் முன்னர் இளமையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிமொழி வழிகாட்டி நிற்கின்றது. 
பருவ வயது என்பது முற்றிலும் நல்ல பருவமல்ல. கெட்ட மோசமான பருவமுமல்ல. இளமையென்பது வாளைப் போன்றது. அதனைப் போர் வீரனும் பயன்படுத்தலாம்; கொள்ளைக்காரனும் பயன்படுத்த முடியும். மனித இன வரலாற்றில் ஆக்கப் பணிகளில் முன்னின்று உழைத்த பெருமை அதிகம் இளைஞர்களையே சாரும். அதேவேளை உலகில் நாசவேலைகளுக்கும், அழிவு வேலைகளுக்கும் அவர்களே துணை நிற்பதையும் காணலாம். 
ஒரு சமூகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அதன் இளைஞர்களில் தங்கியுள்ளது என்றால் மிகையாகாது. தனது இளைஞர் பரம்பரையை சரியாகப் பயிற்றுவித்து, முறையாக நெறிப்படுத்தி, வழிப்படுத்திய ஒரு சமூகமே எழுச்சி பெற முடியும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது. இளைஞர்களை இழந்த சமுதாயம் தன் இருப்பை இழந்து விடும் இருந்த இடம் தெரியாமல் தொலைந்து விடும். இவ்வகையில் இஸ்லாம் இளமையின் முக்கியத்துவத்தை பக்குவப்படுத்தி அதன் மூலம் பயன் பெறுமாறு வலியுறுத்துகின்றது. முன்மாதிரியான ஓர் இளைஞனுக்கு உதாரணமாக அல்-குர்ஆன் நபி யூஸுபைக் குறிப்பிடுகின்றது. அவரின் ஆளுமைப் பண்புகளையும் அவர் பெற்றிருந்த திறன்களையும் தருகின்றது. அடையாளப் புருஷர்களாகக் கொள்ளத்தக்க ஓர் இளைஞர் குழுவைப் பற்றி அல்-குர்ஆனின் அல்-கஹ்ப் அத்தியாயம் விளக்குகின்றது.  
''நிச்சயமாக அவர்கள் சில இளைஞர்கள்; அவர்கள் தங்கள் இரட்சகனை விசுவாசித்தார்கள்;. மேலும் நேர்வழியை அவர்களுக்கு நாம் அதிகப்படுத்தினோம். மேலும், (அக்கால அரசன் முன்னிலையில்) அவர்கள் எழுந்து நின்று வானங்களுக்கும் பூமிக்கும் இரட்சகன்தான் எங்கள் இரட்சகன் அவனையன்றி வணக்கத்திற்குரிய வேறு நாயனை நாம் அழைக்க மாட்டோம். (அவ்வாறு அழைத்தால்) அப்போது உண்மையில் நாம் வரம்பு மீறிய வார்த்தையைக் கூறிவிட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறிய போது, அவர்களுடைய உள்ளங்களை (நேரான வழியில்) நாம் உறுதிப்படுத்தி விட்டோம்.'' 
நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவப் பணிக்குத் தோள் கொடுத்தவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்களாகவே இருந்தனர். இஸ்லாமிய வரலாற்றில் ஸ்பெயினைக் கைப்பற்றிய தாரிக் பின் ஸியாதும், இந்தியாவின் மீது படையெடுத்து வந்த முஹம்மத் பின் காஸிமும் இளம் வாலிபர்களே. 
ஆனால், இன்றைய முஸ்லிம் உம்மாவைப் பொறுத்த வரையில் அதன் இளைய தலைமுறையினரின் நிலை பெரிதும் கவலைக்கிடமானதாகக் காணப்படுகின்றது. மேற்கத்தேய, சடவாத, உலகாயத கலாசாரத்தின் படையெடுப்புக்களுக்கு முன்னால் எமது இளைஞர்கள் நாளாந்தம் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். சிற்றின்பங்களும் அற்ப உலகாயத அடைவுகளுமே இவர்களில் பெரும்பான்மையானோரின் இலக்குகளாக இருக்கின்றன. வாழ்வின் அர்த்தத்தைப் புரியாமல் தம் மீதுள்ள பொறுப்புக்களை உணராமல் தான்தோன்றித்தனமாக வாழும் வாலிபர்களையே எங்கும் காண முடிகின்றது. இளைஞர் சமூகத்தின் இவ்வீழ்ச்சி நிலையின் பயங்கர விளைவை உலகளாவிய முஸ்லிம் உம்மா இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. 
எனவே இன்றைய சமூகப் புனர்நிர்மாண சீர்திருத்தப் பணியிலும் பிரசாரப் பணியிலும் இளைஞர் விவகாரம் முக்கியத்துவமும் முன்னுரிமையும் பெற வேண்டியது அத்தியவசியமாகும். அதிலும் இளைஞர்களின் தனிப்பட்ட ஒழுக்க வாழ்வை ஒழுங்குபடுத்துவது பிரதான இடத்தைப் பெறல் வேண்டும். இன்றைய இளைஞர்களின் இருப்பை அச்சுறுத்தும் மிகப் பெரிய பிரச்சினை ஒழுக்கச் சீர்கேடுகளே என்பதை அறியாதோர் இருக்க முடியாது. ஆயினும் நடைமுறையில் முஸ்லிம் சமூகத்தில் இளைஞர்களின் பிரச்சினைகள் உரிய இடத்தைப் பெறாமை கவலைக்குரியதாகும்.    
அஷ்ஷெய்க்
ஏ.ஸீ. அகார் முஹம்மத் ( நளீமி) எம்.ஏ
பிரதித்  தலைவர், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.