( ஐ. ஏ. காதிர் கான் )

   இஸ்லாத்தின் எதிர்கால செல்வங்களான எமது பிள்ளைகளை மார்க்க அறிவு, கல்வி ஞானத்துடன் பெற்றோர்கள் வளர்க்க வேண்டும் என, அஷ் -  ஷெய்கு அஸ் ஸெய்யிது ஹஸன் கோயா தங்கள் தெரிவித்தார்.

   முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள் பெயரால் நவம்பர் 26 முதல்  தொடர்ந்து பத்து நாட்களாக ஓதப்பட்டு வந்த மனாகிப் மஜ்லிஸின் இறுதி நாள்  தமாம் வைபவ நிகழ்வில் உரையாற்றும்போதே ஹஸன் கோயா தங்கள்  இதனைத் தெரிவித்தார்.

    தெஹிவளை, கெளஸிய்யா அரபுக் கல்லூரியின் மஜ்லிஸ் மண்டபத்தில், (05) வியாழக்கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின்பு தமாம் மஜ்லிஸ் நிகழ்வு இடம்பெற்றது.

   கேரளா, கன்னத்தூரைச் சேர்ந்த அஷ் - ஷெய்கு, அஸ் - ஸெய்யிது ஹஸன் கோயா தங்கள், அஷ் - ஷெய்கு, அஸ் - ஸெய்யிது ஹுஸைன் கோயா தங்கள் ஆகிய இரு சகோதரர்களின் முன்னிலையில் இச்சிறப்பு மஜ்லிஸ் தொடர்ந்து பத்து நாட்களாக மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது.

    முஹிப்பீன்கள், முரீதீன்கள், ஷாதாத்மார்கள், உலமாக்கள் என பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இச்சிறப்பு மஜ்லிஸ் நிகழ்வில் ஹஸன் கோயா தங்கள் மேலும் உரை நிகழ்த்தும்போது,
   பிள்ளைகளை ஞானக் கல்வியுடன் சிறப்பாக வளர்த்தெடுப்பது, ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையாகும். சிறு பிராயத்திலிருந்தே அவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். தகாத வழிகளில் அவர்கள் செயற்படாமல் இருப்பதற்கான வழி வகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஒழுக்க விழுமியங்களுடன் வளர்க்கப்படும் குழந்தைகளாலே ஞானமிக்க சிறந்த சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியும். இதுவே பெற்றோர் தமது குழந்தைச் செல்வங்களுக்கு வழங்கும் மிகச் சிறந்த செல்வமாகும்.

   இன்றுள்ள சில சிறார்கள் கைபேசியும் கையுமாக அலைந்து  திரிகின்றார்கள். இதில் நன்மையை விட, கூடுதலாக கெடுதிகளே உள்ளன. இவ்வாறான பயன்பாடுகளை சிறார்கள் நிறுத்துவதற்கு  பெற்றோர்கள் வழிகாட்ட வேண்டும்.  எதிர்கால நல்லொழுக்கமுள்ளவர்களாக அவர்களை கரை சேர்க்க இந்த வழிகாட்டல்கள் உதவும்.

   இன்று சில பெற்றோர்கள், தமக்கு பிள்ளைகளே இல்லை எனக் கவலைப்படுகின்றார்கள். மற்றும் சிலர், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது எப்படி என சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.  பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர்கள் அவர்களை எப்படியாவது முன்னிலைப்படுத்தி ஒழுக்க சீலர்களாக வளர்க்க முன்வர வேண்டும் என்பதையே இம்மஜ்லிஸின் மகிமையால் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

   முஹியித்தீன் என்றால், மார்க்கத்தை உயிர்ப்பித்தவர் என்பது பொருள். முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்கள், தீனை உலகமெங்கும் உயிர்ப்பித்தவர். அதன் ஒளியை  நான்கு  திசைகளிலும் பரப்பியவர். தனது பெற்றோர்களுடன் சிறு பிராயத்திலிருந்தே கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன்  நடந்து கொண்டவர். இதனால் இவர்கள் அல்லாஹ்விடத்தில் உயரிய அந்தஸ்தும் மேன்மையும் பெற்று அதி சிறந்த ஞானியாகவும் மார்க்க மேதையாகவும் திகழ்ந்தார்கள். 

இவர்களின் வழி முறைகள், எமக்கு சிறந்த படிப்பினைகளைத் தந்து கொண்டிருக்கின்றன. இவற்றை அறிந்து தெரிந்து வைத்திருப்பது,  இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.  எனவே, ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளும் நல் வழிப் பாதையில் சென்று, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக மாற முயற்சிப்போமாக என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.