வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான
நிவாரணப் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்குக!


பிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான மேலதிக நிவாரணப் பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான அத்தியவசிய உணவுப்பொருட்களை வழங்க அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இது தொடர்பில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அவசர வேண்டுகோளொன்றினை விடுத்துள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“தொடர்ந்து பெய்ந்து வரும் அடைமழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 3ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு தேவையான போதியளவு வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை.
இந்நிலை தொடருமாயின் உன்னிச்சை அணைக்கட்டு முழுமையாக திறக்க வேண்டிய நிலை ஏற்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறானதொரு நிலை ஏற்படுமானால் இதனால் மேலும் பாதிப்புக்கள் ஏற்படும் அபாயமுள்ளது.

ஏனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி உணவு, உலர் பொருட்கள் மற்றும் அடிப்படைத்தேவைகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு” அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனர்த்த நிவாரணங்களுக்கு பொறுப்பான அமைச்சரிடமும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.