வில்பத்து தேசிய சரணாலயம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தன்னை இலக்கு வைத்து தான் செய்யாத தவறு தொடர்பில் இலத்திரனியல், அச்சு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியன மக்களிடையே அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை பரப்பி வருவதாகவும் அதனூடாக குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் இனவாதத்தை ஏற்படுத்தவும் சிலர் முயற்சிப்பதாக அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

இதேவேளை, தனது கடிதத்தில் அவர் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ரிசாட் பதியூதீன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ´கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவியை வகித்த தனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவ்வாறானவர்கள் முன்வைத்தாக அவர் தெரிவித்துள்ளார்.

வில்பத்து சரணாலயத்தை துப்புரவு செய்து முஸ்லிம் மக்களை குடியேற்றியதாகவும் மற்றும் பயங்கரவாதி சஹரானுடன் தொடர்புகளை பேணியதாகவும் தெரிவிக்கப்படுவது அவற்றில் பிரதான குற்றச்சாட்டுக்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் எந்தவித அடிப்படையும் இல்லாதவை எனவும் அவை குறுகிய அரசியல் இலாபம் கருதி முன்வைக்கப்பட்டவை என்பதையும் தாங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதாக ரிசாட் பதியூதீன் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தான் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை பாராளுமன்ற தெரிவுக்குழு விசாரித்த அதேவேளை, பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தான் நிரபராதி என அப்போது பதில் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியவர் சபாநாயகருக்கு அறிக்கை சமர்பித்தாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வில்பத்து சரணாலயத்தில் உள்ள எந்த ஒரு அரச காணியையும் தனக்கிருந்த அதிகாரத்தை பயன்படுத்தி அசாதாரணமான முறையில் அழிக்கவில்லை என்பது தொடர்பில் தாங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவதாகவும் ரிசாட் பதியூதீன் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களை மீண்டும் 2009 ஆம் ஆண்டு அவர்களின் சொந்த கிராமங்களில் மீள்குடியமர்த்த அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த தாங்கள் வழங்கிய ஒத்துழைப்புகளை நன்றியுடன் நினைவு கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் நிரபராதி என அறிவிப்பட்டுள்ள நிலையில் அவசியம் ஏற்படின் மற்றுமொரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து அந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்துமாறு விநயமாக கேட்டுக்கொள்வதாகவும் ரிசாட் பதியூதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கேட்டுள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.