ஆக்கம் : Sajidh Safwan
தொடர் : 02

உலகறிந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கேபரியேல் கார்சியா மார்க்வஸ், ஃபிடல் காஸ்ட்ரோ குறித்துக் குறிப்பிடும்போது, "குரலின் வலிமை". “காதுமடல்கள் சிலிர்க்க, தங்களின் அன்றாட வேலைகளை மறந்து, இந்தக் குரலின் வலிமையில் லயித்துப் போனார்கள், நேரம் செல்ல செல்ல, தங்களின் வேலைகளைச் செய்து கொண்டே, காதுகளை, ஃபிடல் காஸ்ட்ரோ உரையின் மீது வைத்த வண்ணம் செய்து கொண்டிருந்தனர். அது ஏழு மணிநேர உரை தெருக்கள், வேலைத்தலங்கள், வீடுகள் என எல்லா இடங்களிலும், அந்த உரை ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. கைகள் வேலையில் இருந்தாலும், கவனம் ஒலித்த குரலில் இருந்ததைக் காண முடிந்தது”, என மார்க்வஸ் தன்னுடைய முதல் கியூப அனுபவம் பற்றி, இவ்வாறு எழுதியுள்ளார்.

இது ஏதோ ஒரு புகழ்ச்சிக்காக பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல. பேச்சு என்பது தனிச்சிறப்பாக இருந்தாலும், ஃபிடல் தனது, அரசியல் உறுதியைக் குறிப்பாக, ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை வெகுமக்கள் முழுமையாகப் பங்கேற்கும் திருவிழாவாக, மாற்றிக் காட்டிய பெருமை கொண்டவர்.

உதாரணமாக 6 வயது சிறுவன் ஏலியன் கோன்சலாஸ், அவனுடைய பெற்றோரிடம் இருந்து பிரிந்து, அமெரிக்காவின் மியாமி யில் அடைத்து வைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், கியூபா முழுவதும் நடந்த போராட்டத்தைக் குறிப்பிடலாம். இறுதியில் அமெரிக்காவின் நீதிமன்றம், ஏலியன் என்ற சிறுவனை அமெரிக்காவில் வைத்து இருக்கக் கூடாது. அவன் பெற்றோருடன் வசிக்க அனுமதிக்க வேண்டும், அதற்காக அவனை கியூபாவிற்கு அனுப்பி வைக்க வேண்டும், எனத் தீர்ப்பு வழங்கியது. ஒரு குழந்தைக்கும், தந்தைக்குமான உறவை அமெரிக்கா, கியூபாவிற்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது, இறுதியில் கியூப மக்களின் போராட்டங்களால், அமெரிக்கா அம்பலப்பட்டு நின்றது. 2001 ம் ஆண்டில் அந்தச் சிறுவன் ஹவானா நகரத்திற்கு வந்த போது, ஃபிடல் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர்.

மற்றொரு உதாரணம் எழுத்தாளர் மார்க்வஸ் குறிப்பிடுகிறார், “ஒருமுறை எங்களுடன், சேகுவேரா சுற்றி வளைத்துக் கொல்லப்பட்டது குறித்தும், மொண்டென் அரண்மனை முற்றுகையிடப்பட்டு, அலெண்டே கொல்லப்பட்டது குறித்தும் ஃபிடல் ஆற்றிய உரைகள் வரலாற்றுச் சொற்சித்திரங்கள்” என்கிறார். லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான, வெளிநாட்டுக்கடன் குறித்து ஃபிடல் ஆற்றிய உரை மிகச் சிறப்பு வாய்ந்தது. “இந்தக் கடன் திருப்பிச் செலுத்த முடியாதது. கடனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள விளைவுகள், பொருளாதார வீழ்ச்சி, சமூக பொருளாதார பாதிப்புகள், சர்வதேச உறவுகளில் பின்னடைவு என சகல பரிமாணத்தையும் தொட்டு, லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒற்றுமைக்கான வரைவாக நீட்சி பெற்று, வானத்தைப்போல் விரிந்து பரந்து, அந்த உரை அமைந்ததாகக் கூறுகிறார். அந்த விவாதங்களின் தொடர்ச்சியாக, ஹவானாவில் மிகப்பெரிய கருத்தரங்கம் நடத்தி, பல துறை நிபுணர்களைப் பங்கேற்கச் செய்து, அவரின் வரைவு தீர்மானத்தைக் காட்சிப்படுத்தினார். அதுவே பின்னாளில், பொலிவாரிய மாற்று வங்கி அல்லது, லத்தீன் அமெரிக்க கரீபியன் நாடுகளின் சமூகம் போன்ற அமைப்புகள் உருவாக அடித்தளம் இட்டது.

தொடரும் ...........................

உதவிய நூல்கள்:

1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997
2. குற்றவாளிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999
3. குரலின் வலிமை – 2005

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.