இந்த வருடம் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை ஒத்திவைப்பது தொடர்பில் எந்தவித தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை விடுத்துள்ள கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாடு முகம் கொடுத்துள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொள்ளாது உண்மைக்கு புறம்பான பொறுப்பற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் எனவும் கல்வி அமைச்சு மக்களை கேட்டுள்ளது.

கல்வி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் பரவலால் முழு உலகும் அவதியுறும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை இந்த சவாலை வெற்றிக்கொள்ள தீர்மானமிக்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இவ்வாறான நிலைமையில் மேற்குறித்த உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கத்தால் வெளியிடப்படும் உத்தியோகப்பூர்வ செய்திகளை மாத்திரம் நம்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்´

(அததெரண)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.