தடைகளைத் தகர்த்து முன்னேறும் கியூபா!

ஆக்கம் : Sajidh Safwan
தொடர் : 04

உலகின் சக்தியாக விளங்கிய சோவியத் யூனியன் சோசலிச கொள்கைகளைக் கைவிட்ட போது, கியூபா கடுமையாகப் பாதிக்கப்படும் என்று தான் எதிர்பார்த்து இருந்தனர். உண்மையில் பாதிப்பு இருந்தது. கியூபாவின் சர்க்கரை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மின்சாரம் உள்ளிட்ட எரிபொருள் இறக்குமதி நின்றுபோன நிலையில், அதை எதிர்கொண்டு முன்னேறிய சோசலிச நாடு என்ற பெருமைக்குரியது கியூபா.

அமெரிக்கா விதித்த சட்டத்தின் காரணமாக, கியூபாவின் சர்க்கரையை இறக்குமதி செய்து கொண்டிருந்த 17 நாடுகள், தங்களின் வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன. ஏற்கனவே சோவியத் யூனியனின் இறக்குமதி நின்று போன நிலையில், கியூபா நிலை குழைந்து விடும் என எதிர்பாத்தார்கள். மாறாக கியூபா தனது சந்தை வியூகத்தை உள்நாடு சார்ந்ததாக மாற்றிக் கொண்டது. கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்க கியூபர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். இதற்கு செவி சாய்த்த மக்கள்,

1. கூட்டு வாழ்வின் மூலம் எரிசக்தி பயன்பாட்டைக் குறைத்தார்கள்.
2. வட அமெரிக்க முறை வாழ்வை நிறுத்தி, எளிய ஆற்றல் முறை வாழ்விற்குத் திரும்பினர்.
3. நகரங்களுக்கும், கிராமப்புறங்களுக்குமான வாழ்முறை இடைவெளியைக் குறைத்தார்கள்.

12 மணிநேரம் மின்வெட்டு, மக்கள் தங்களின் பெட்ரோல் வாகனங்களான மகிழ்வுந்து, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைக் கைவிட்டு பொதுவாகணங்களான பெரிய டிராம் பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, முடிந்த அளவு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டிகளைப் பயன்படுத்துவது, என்ற அரசின் வேண்டுகோள். ஆகியவற்றை எதிர் கொண்ட விதம் வளரும் நாடுகள் பலவும் பின்பற்ற வேண்டிய ஒன்று. நாட்டின் மக்கள் அத்துணை பேரும் ஒத்துழைக்காமல் இந்தத் துணிச்சலான முடிவை, ஒரு அரசு எடுத்திட முடியாது. இங்கேயும் கியூபாவின் அரசின் தலைவர் பொறுப்பில் இருந்த ஃபிடலின் குரலின் வலிமையை உணர முடியும்.

இவை சாதாரண வேண்டுகோள் என்பதை விடவும், இக்கொள்கையைப் பின்பற்றுவதற்கும், அதைத் தொடர்ந்து, மேற்படித் துறைகளில் மேம்பாடு காண மக்களின் ஒத்துழைப்பை நாடவும், சாலைகளில் சின்ன சின்ன விளம்பரங்களைப் பார்க்க முடியும். மின்னாற்றல் புரட்சி, விவசாயப் புரட்சி, சோசலிசமா? பார்பாரிசமா? (சமத்துவமா? காட்டுமிராண்டித் தனமா?) என்ற சிறிய அளவிலான, ஃபிளெக்ஸ் விளம்பரங்கள் சாலையின் ஓரத்தில், யாருக்கும் இடையூறு இல்லாமல், ஆனால் பார்வையில் படும்வகையில் திட்டமிட்டு வைக்கப்பட்டிருப்பதைக் காணமுடியும். மக்களின் உணர்வோடு கலந்ததாக மேற்படி விளம்பரங்கள் அமைந்தன.

இது உள்நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. அதேபோல் உலக அளவிலான மக்களின் ஆதரவையும் கியூபா திரட்டியது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், கியூபா ஆதரவு மாநாடு, 4 முறை நடந்துள்ளது. இதுபோல், பல்வேறு கண்டங்களில் நடந்த மாநாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்க நடவடிக்கைகளை அம்பலப்படுத்திடவும், கியூபாவிற்கான ஆதரவை வென்றெடுக்கவும் உதவியது. இது மிகப்பெரிய அளவில் பேசப்பட வேண்டிய, ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் ஆகும்.

தொடரும் ...........................

உதவிய நூல்கள்:

1. ஃபிடல் காஸ்ட்ரோ உரைகள் – 1997
2. குற்றவாலிக் கூண்டில் வட அமெரிக்கா – 1999
3. குரலின் வலிமை – 2005
4. Cuba The Blockade and The declining Empire – 2005
5. நேருக்கு நேர் – 2002
6. சூறாவளியும் அடிபணியும் – 2006
7. சாவேஸ் – 2006
— in Havana, Cuba.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.