கொரோனா வைரசின் தாக்கத்தினால் உலகமே அச்சத்தில் உறைந்துள்ளது. பயங்கரவாதத்தையும், வன்முறைகளையும் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதனை நாங்கள் கண்டிருக்கின்றோம். ஆனால் ஒரு வைரசை கட்டுப்படுத்துவதற்காக பல நாட்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டதானது அதன் பயங்கரத்தை காண்பிக்கின்றது.

இந்த வைரசானது, மனிதனால் வகைப்படுத்தப் பட்டிருக்கின்ற பணக்காரன் ஏழை, மதம், சாதி, குலம், நிறம், நாடு, படித்தவன் படியாதவன் என்ற எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் அனைத்து தரப்பினருக்குள்ளும் ஊடுருவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

ஆனால் சர்வதேச ஊடகங்கள் பணக்கார நாடுகளின் சேதவிபரங்களை மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடுகின்றது. சாதாரணமாக பட்டினியால் செத்துமடிகின்ற ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள வறுமையான நாடுகளில் என்ன நடக்கின்றது என்ற விபரங்கள் எதுவும் வெளிவருவதில்லை. 

இந்த நிலையில் யார் அழிந்தாலும் பருவாயில்லை, பழிவாங்குதல், ஆக்கிரமித்தல்., அதிகாரத்தை நிலைநாட்டுதல் என்ற ரீதியில் தொடர்ந்து சிரியா போர்க்களம் உள்ளது.

சிரியாவில் ஐந்து நாடுகளின் இராணுவமும், அந்தந்த நடுகளின் ஆதரவு இயக்கங்களும் உள்ளன.

வடக்கு சிரியாவில் நிலைகொண்டுள்ள துருக்கி படைகள் தங்களை பலப்படுத்தி உள்ளார்கள். ஈராக்கில் உள்ள மேலதிக அமெரிக்க படைகள் அங்கு தளம் அமைத்துள்ளதுடன், துருக்கிக்கு ஆதரவான நிலையில் உள்ளது. 

அத்துடன் சிரியப்படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் அங்கு உள்ளன. அங்கு ரஷ்ய மற்றும் அமெரிக்க படைகளுக்கிடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவது வழக்கமாகும்.

கடந்த காலங்களில் ஐ.எஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் இட்லிப் பிரதேசத்திலிருந்து துருக்கி படைகளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற இஸ்லாமிய இயக்கங்களை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் ரஷ்ய படையின் துணையுடன் சிரியப் படைகள் செயல்பட்டு வருகின்றது.

ஆனால் தனது சார்பு இயக்கங்களுக்கு பாதுகாப்பு வழங்கியவாறு துருக்கி இராணுவ ஆடைகளுடன் தனது இராணுவ முகாமுக்குள் இருக்கின்ற இந்த இயக்கங்கள் துருக்கி படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதனால் அவ்வப்போது சிரிய படைகளுக்கும் துருக்கிக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகின்றது.

உலகம் கொரோனா வைரசின் அச்சத்தினால் பீதியடைந்துள்ள நிலையில் இந்த பிரதேசம் அவ்வாறான எந்தவொரு அச்சமுமின்றி யுத்தம் புரிவதிலேயே கவனம் செலுத்தி வருகின்றது. 

எமது நாட்டு அரசியல்வாதிகளும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள். அதாவது மக்கள் செத்து மடிந்தாலோ அல்லது நாடு சுடுகாடாக மாறினாலும் பருவாயில்லை எப்படியாது தாங்கள் பாராளுமன்ற பதவியை அடைந்தால் மட்டும் போதும் என்ற நிலைப்பாட்டிலே உள்ளார்கள்.

இதன் மூலம் எமது அரசியல்வாதிகளின் சுயநலமும், பதவி வெறியும், மனிதாபிமானமற்ற போக்குகளும் எந்த நிலையில் உள்ளது என்பதனை புரிந்துகொள்ள முடியும்.       

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.