இலங்கையின் பௌத்த பெரும்பான்மையை ‘Majority with a minority complexity’ என பேராசிரியர் எஸ். ஜே. தம்பையா வர்ணித்திருக்கிறார். இலங்கையில் சிறுபான்மையாக வாழ்கின்ற அடுத்த மூவினங்களும் சர்வதேச பெரும்பான்மையாக இருப்பதால் ஏற்பட்ட நிலைதான் இது. ‘தேரவாத சிங்கள பௌத்தம்’ வாழும் ஒரே நாடு என்ற வகையில் மிகை அச்ச உணர்வும், மிகை எச்சரிக்கை உணர்வும் இங்கே நீண்ட காலமாக இருந்து வந்தாலும் கூட, உலகமயமாக்கலுக்குப் பின்னரான சர்வதேச அரசியல் மாற்றங்களினூடாக இலங்கை பௌத்த பெரும்பான்மையானது ஒரு சிறுபான்மைக்குரிய அச்சத்துடனேயே வாழ்கிறது. அந்த அச்சம்தான் அதனை, தன்னைச் சூழவுள்ள ஏனைய சிறுபான்மைகளை, குறிப்பாக international trend பிரகாரம் முஸ்லிம் சிறுபான்மையை இனவாதக் கண்ணோட்டத்துடனேயே நோக்க வைக்கிறது. உலகமயமாக்கலின் விளைவாக ஏற்படும் இத்தகைய பேரினவாத அச்சத்தை பேராசிரியர் அர்ஜூன் அப்பாத்துரை அழகாக கோட்பாட்டாக்கம் செய்வார். ‘இலங்கையில் பௌத்த பெரும்பான்மை தொடர்ந்தும் ஓர் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகின்றது’ என்று சொல்வதனூடாக கலாநிதி குமாரி ஜயவர்தனவும் இக்கருத்தை வலியுறுத்துகிறார்.

யுத்த நிறைவுக்குப் பின்னரான இலங்கை அரசியலில் பொதுவாகவும், ஏப்ரல் 21க்குப் பின்னரான இலங்கை அரசியலில் குறிப்பாகவும், சர்வதேச இஸ்லாமோபோபியா நிகழ்ச்சிநிரலின் அம்சங்கள் உள்ளீர்க்கப்பட்டு வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. ஏப்ரல் 21க்குப் பின்னர் இஸ்லாமோபோபியாவானது அரசியல் தளத்திலிருந்து சமூகத் தளத்தை நோக்கி நகர்த்தப்பட்டதும், வெகுஜன மற்றும் சமூக ஊடகங்களுக்கூடாக அவற்றின் விதைகள் மூலை முடுக்கெங்கும் தூவப்பட்டதும் நாமனைவரும் அறிந்த உண்மை.

இந்த நிகழ்ச்சி நிரலுக்கூடாக பிரயோசனமடையப் போவது அரசியல் மற்றும் பொருளாதார முதலைகள் தான் என்றாலும் கூட... வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு இந்த வெறுப்பினாலும் குரோதத்தினாலும் போஷிக்கப்பட்டவர்கள் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் மறக்கலாகாது.

ஏற்கனவே உள்ள அச்சம், தற்போது இறக்குமதி செய்து விநியோகிக்கப்படும் அச்சம் என இரண்டும் சேர்ந்து அந்த சமூகத்தின் நிம்மதி கெடுக்கப்பட்டுள்ளது. இந்த பெரும்பான்மை சமூகத்தை வெறுப்போடும் குரோதத்தோடும் பார்ப்பதை விட பரிதாபத்தோடு பார்க்க வேண்டிய ஒரு நிலையே இருக்கின்றது.

இந்த யதார்த்தத்தை மனதில் கொண்ட நிலையில்தான் ‘கொரோனாவைரஸ் இனவாதத்தை’யும் நாம் கையாள வேண்டும். பரவலாக இனவாதத் தீ மூட்டப்பட்டிருக்கின்ற ஒரு சூழலில், ஏப்ரல் 21ன் ஒரு வருடப் பூர்த்தியை முன்னிட்டு ஒரு High dosage இனவாதத்தை அரங்கேற்ற இனவாதிகள் தயார்நிலையில் இருந்த போது கொரோனாவைரஸ் அதற்கான ஒரு பெரும் தடைக் கல்லாக வந்து சேர்ந்தது.

இப்படியான ஒரு தொற்று நோய் பரவலின் போது இனவாதம் அரங்கேறுவதை யாரும் ரசிக்கவோ வரவேற்கவோ மாட்டார்கள் என்பதே உண்மை. ஆனால் மேற்கு நாடுகளில் போன்றல்லாது இங்கு கொரோனாவைரஸ் பரவலானது பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அதனை வைத்தும் இனவாதம் செய்ய முடியுமாக இருக்கின்றது.

இப்போது ஆரம்பித்திருக்கும் இந்த இனவாதமானது ஏப்ரல் 21 ஞாபகர்த்த தினத்துக்கான பூஜைகளேயன்றி வேறில்லை.

இப்போது நடைபெறும் நிகழ்வுகளை எமது ஃபிக்ஹ் கண்ணாடிகளுக்கூடாக பார்க்காமல் சமூக, அரசியல், புவியரசியல், மானுடவியல் கண்ணாடிகளுக்கூடாகப் பார்த்தே புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமக்காக வெட்டப்பட்டிருக்கும் குழியில் விழுந்து விடாமல் பாதுகாப்பாக தாண்டிச் செல்லலாம்.

இடர்களும் இன்னல்களும்தான் மாற்றங்களுக்கான ஆரம்பப் புள்ளிகளாகும். தமக்குத் தேவையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புபவர்கள், ஏற்படும் அனர்த்தமொன்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள், அல்லது தமக்குத் தேவையானதை செய்து கொள்ள அனர்த்தமொன்றையே ஏற்படுத்துவார்கள். அந்த சந்தர்ப்பத்தில் ஏனையவர்களும் விரும்பினால் அவர்கள் விரும்புகின்ற மாற்றத்தை ஏற்படுத்தலாம். அதற்கு எது இல்லாவிட்டாலும் அறிவு தேவை.

Milton Friedmanஇன் கீழ்வரும் கருத்தை வாசித்துக் கொள்ளுங்கள்.

“Only a crisis - actual or perceived- produces real change. When that crisis occurs, the actions that are taken depend on the ideas that are lying around. That, I believe, is our basic function: to develop alternatives to existing policies, to keep them alive and available until the politically impossible becomes politically inevitable”

இப்போது எமக்கு முன்னால் Politically impossible ஆக இருக்கின்றவற்றை Politically inevitable ஆக மாற்றுவதற்குரிய வழியைப் பார்க்காமல், உணர்ச்சிப் பிரவாகத்தில் நனைவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை.

நாங்கள் முயற்சிக்காத வரையில் இறையுதவியும் கிடைக்கப் போவதில்லை.

Affan Abdul Haleem
2020.03.31

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.