இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி இரத்துச் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் ஒலிம்பிக் உட்பட பல பிரபல்யமான போட்டித் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டிகளின் 13 ஆவது பருவக காலப் போட்டிகள் மார்ச் 29 ஆம் திகதி முதல் மே மாதம் 23 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த போட்டி ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு 21 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வரை இது அமுலில் இருக்கும். இதனால் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால் நடப்பு ஆண்டுக்கான தொடரை ரத்து செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அதே நேரத்தில் கிரிக்கெட் சபை இந்த விடயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏப்ரல் 15 ஆம் திகதிக்கு பிறகு இதுகுறித்த முடிவை எடுக்கும் எனத்தெரிகிறது. ஐ.பி.எல். போட்டி ரத்தானால் பி.சி.சி.ஐ.க்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.