வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்காக 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினை ஐ.சி.டி.ஏ. உடன் இணைந்து வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது
இதுதொடர்பாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு
ஊடக வெளியீடு
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் நலனுக்காக இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.சி.டி.ஏ) மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியன இணைந்து உருவாக்கிய 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பு இன்று (26 மார்ச் 2020) வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கான வலைத்தள இணைப்பினை அமைச்சின் வலைத்தளப் பக்கமான www.mfa.gov.lk   முகவரியிலும், மற்றும் www.contactsrilanka.mfa.gov.lk என்ற இணையத்தளத்திலும் அணுகிக் கொள்ளலாம்.
 கோவிட் - 19 நோய் நிலைமையை எதிர்த்துப் போராடுவதற்காகவும், விரைவான மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காகவும் அனைத்து அரசாங்கப் பங்குதாரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் இந்த இணைய முகப்பு நிறுவப்பட்டது.
கோவிட் - 19 போன்ற அவசர நிலைமைகளில் அணுகிக் கொள்வதற்கும், உதவுவதற்கும் இலங்கை அரசாங்கத்தை அனுமதிக்கும் முகமாக, இந்த இணைய முகப்பின் அடிப்படைச் செயற்பாடுகளில் தானாக முன்வந்து பதிவு செய்து கொள்ளுமாறு வெளிநாட்டில் வாழும் அனைத்து இலங்கையர்களும் அழைக்கப்படுகின்றார்கள். குறித்த நேரத்திற்கான உண்மையான தரவுகளின் அடிப்படையில் விரைவான நடவடிக்கைகளை அமைச்சு முன்னெடுப்பதற்கு இந்தத் தளம் உதவியாக அமையும். வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் ஒற்றை மையப்படுத்தப்பட்ட முனைப்பின் மூலமாக அரசாங்க சேவைகளை அதிகமாக அணுகிக் கொள்வதனை ஊக்குவித்து, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அரசாங்கப் பங்குதாரர்களிடையே தொடர்புகளை மேற்கொள்வதற்கும் இந்தத் திறந்த அணுகல் தளம் மேலும் வழியமைப்பதாக அமையும். மேலும், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் வலையமைப்புடன் இந்த இணைய முகப்பு இணைத்து வைக்கும்.
நீண்ட காலத்திற்கு விரிவுபடுத்தப்படும் இந்த இணைய முகப்பு, அதிகாரபூர்வ தகவல் ஆதாரமாக செயற்பட்டு, அரசாங்கத்தால் வழங்கப்படும் பரந்தளவிலான டிஜிட்டல் சேவைகளை வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகவும், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து அவசரமான காலங்களில் இணையவழி உதவி மையமாக செயற்படுவதற்காகவும் பிரத்தியேக அதிகாரிகள் குழுவொன்று ஏற்கனவே வெளிநாட்டு உறவுகள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக் கோரிக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக, நாடுகளின் மூலமாக பதிவு செய்யும் முறைமையானது, நாட்டிலிருந்து வெளியேறுதல் போன்ற முக்கியமான சூழ்நிலைகளின் போது உறுதியான கொள்கை முடிவுகளை அமைச்சு முன்மொழிவதற்கு அனுமதிக்கும்.
இலகுவான வசதிக்காக, பொதுவான கேள்விகளுக்கான வழிகாட்டியாக செயற்படக்கூடிய, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் பட்டியலையும் இந்த இணைய முகப்பு கொண்டுள்ளது. பயனருக்கு நட்புறவான இந்தத் தளத்தை இணையம் வாயிலாகவும், எந்தவொரு உலாவி அல்லது இடைமுகத்திலும் எளிதாக அடைய முடிவதுடன், பதிவு செய்யப்பட்ட அனைத்து பயனர்களும் கையடக்கத் தொலைபேசியொன்றினூடாகவும் கூட கோரிக்கையொன்றை முன்வைக்க அல்லது உதவிகளைக் கோர முடியும்.
இந்த இணைய முகப்பினூடாக வழங்கப்பட்ட தரவுகள் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களின் தனியுரிமையை உறுதி செய்வதற்காக பாதுகாக்கப்படுவதுடன், பயனர்களின் அனுமதியின்றி பகிரப்பட மாட்டாது.
இணைய முகப்பின் அம்சங்களை படிமுறைகளாக விரிவாக்குவதற்கும், 'இலங்கையுடன் தொடர்பு கொள்ளுதல்' இணைய முகப்பினூடாக வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான விரிவான இணையவழியான சேவைத் தளத்தை உருவாக்குவதற்கும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் இணைந்து ஐ.சி.டி.ஏ. நெருக்கமாக செயற்படும்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.