கொவிட்-19 புதிய சூழ்நிலை குறித்து மீளாய்விற்கு GMOA வலியுறுத்தல்!

கொவிட்-19 வைரஸ் பரவுவது தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து உடனடியாக மீளாய்வு செய்யப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எழுத்தமூலம் இந்த கோரிக்கையை இன்று (26) விடுத்திருந்தது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தமது சங்கத்தினால் கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு மேலதிகமாக இந்த கோரிக்கை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரவ வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நாடளாவிய கிளை அலுவலகங்கள் மூலம் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு தமது தலைமையகத்திற்கு சில விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வெலிசர கடற்படை முகாமை அண்மித்து ஏற்பட்டுள்ள துரதிர்ஷ்டவசமா ன நிலைமையினால் இதுவரை கொவிட்-19 வைரஸ் பரவக்கூடிய குறைந்த சாத்தியம் கொண்டிருந்த மாவட்டங்களிலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக அனுராதபுரம், குருணாகல், இரத்தினபுரி, பொலன்னறுவை, மொனராகலை, அம்பாறை, திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் புதிதாக ஏற்பட்டுள்ள அவதான நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளது.

குருணாகல் போன்ற சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள கடற்படை உத்தியோகத்தர்களுடன் தொடர்புள்ள குடும்ப அங்கத்தவர்களுக்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் புதிதாக ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து கவனம் செலுத்துவதுடன், சமூக இடைவௌியை அமுல்படுத்தி மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு அமைவாக மீண்டும் மீளாய்வொன்றினை முன்னெடுக்கும் வரை இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இராணுவத் தளபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை, கடந்த 04 ஆம் திகதி (04-04-2020) தமது சங்கத்தினால் ஜனாதிபதிக்கு கையளித்திருந்த நாட்டை படிப்படியாக வழமை நிலைக்குக் கொண்டுவரும் திட்டமான GMOA COVID-19 EXIT STRATEGY யில் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய அடிப்படை விடயங்கள் அடங்கியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நினைவூட்டியுள்ளது.








Kandytamilnews.com

கருத்துகள்