தெரண டி வி இல் ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியின் அன் எடிட்டட் வீடியோ ஒன்று லீக்காகி இருக்கிறது.தெரண என்று எழுதத்தொடங்குவதை நினைத்தாலே அசூசையாய் இருக்கிறது.ஏற்கனவே எழுதிக் களைத்துப் போன சப்ஜக்டுகளின் தொடர் அணிவகுப்பு இது.இதைப் போஸ்ட் செய்தவுடன் கையை டிட்டோல் போட்டுக் கழுவ வேண்டும்.

ஒரே நாளில் பத்தொன்பது பேருக்கு கொரானா வந்ததாம்.அவர்கள் அத்தனை பேரும் முஸ்லிங்கள் என்று தெரண இல் அமைச்சர் மகிந்தானந்த பேசுகிறார்.லீக்காகி இருக்கும் வீடியோவில் நிகழ்ச்சி நடத்தும் சத்துர "இந்த செய்தியை சொல்லவிட்டதற்கு எனக்கு ஏதாவது தர வேண்டும் என்கிறார்". இன்னும் சம்பாஷாணை போகிறது.'சுகாதாரக் காரணம்' என்று கூறப்பட்ட இறந்தோரின் சடலங்களை எரித்தலின் பின்னால் உள்ள அரசியல் இந்த உரையாடல்களில் அப்பட்டமாய் தெரிகிறது.ரஞ்சன் லீக்,நித்தியானந்தா லீக், கிளிண்டன் -மோனிகா லீக், வாட்டர் கேட் நிக்ஸன்  லீக் மாதிரி இது சத்துர லீக்..

இது திட்டமிட்டு பரப்பப்பட்ட வீடியோ என்று சில PHD இன் வீடியோ சிகாமணிகள் கதற இன்னும் சிலர் "சதுர உன் சாயம் வெளுத்துவிட்டது" என்கின்றனர்.ஏதோ ஊடகத்துறையில் நோபல் பரிசு வாங்கியவனின் கோவணம் இப்போது  மட்டும் காற்றில் பறக்கிற மாதிரி கதை இது.கழுதை எப்படிப்பா  தொழுவத்தில் இருந்து ஐ நா சபைக்கு போகும் ? தெரண என்பது என்ன?அது எப்பேர்பட்ட சானல் என்று எல்லோருக்கும் தெரியும்.அதனிடம் என்ன பவித்திரத்தை எதிர்பார்க்கப் போகிறோம் ?

இந்த கொரானா பீதியை ஒரு சிறுபான்மை இனத்தின் மீது சுமத்திக் கை கழுவும்  தெரணவின் வங்குரோத்துத்தனத்திற்கு எதிராக ஆக்‌ஷன் எடுக்க முடியுமா என்று கேட்டார் நண்பர் ஒருவர்.யார் யாருக்கு எதிராக ஆக்‌ஷன் எடுப்பது ?யாரிடம் போய் முறையிடுவது?

நான் எல்லாம் இந்த தெரண போன்ற அடிமாட்டு பெட்டா சரக்கு ஊடகத்தை மட்டுமல்ல ஶ்ரீலங்கா டி வி சானல்கள் எதையும் பார்ப்பதில்லை.ஃபேஸ்புக் வந்தால் தான் இப்படி ஒரு லோக்கல் சரக்கு அமோகமாய் வாழ்வதே தெரியும்.வீட்டில் டிவியை ஆன் பண்ணியுடன் ஒரே தாவாய் சர்வதேச நியூஸ் மீடியா தான்.இந்த இன வெறுப்பைப் போதிக்கும் பஞ்சப் பரதேசிகளை எல்லாம் எவன் பார்ப்பான்.மார்டின் லூதர் கிங்கையும் மண்டேலாவையும் படித்துவிட்டு இந்த இன வக்கிரகத்தைக் கக்கும் பைத்தியகார மீடியா சூனியங்களைத் தரிசித்துக் கொண்டிருக்க தலையெழுத்தா ?

கொரானா பேரச்சம் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை ஆயிரக்கணக்கில் தினமும் மடிந்து கொண்டிருக்கும் எந்தவொரு தேசத்திலும் அதை குறிப்பிட்ட ஒரு இனத்தோடு ஒரு மதத்தோடு தொடர்படுத்தி மக்களின் பைத்தியகார வெறியைத் தூண்டவில்லை.சீ என் என் தொலைக்காட்சி ட்ரம்பைக் கிழித்துத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தது.இந்த சீரழிவில் இருந்து எப்படி மீள்வது என்று ஐரோப்பா திணறுகிறது.அங்கே ஊடகங்கள் எல்லாம் மக்களின் உணர்வாக பொங்கித் தீர்க்கின்றன.ஒட்டுமொத்த உலகத்தில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் வலதுசாரி ஊடக சல்லிப் பயல்கள் மட்டும் தான் கொரானாவை மதம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

ஊரடங்கு சட்டத்தை இன பேதம் இல்லாமல் அத்தனை பேரும் மீறினார்கள்.முஸ்லிம் ஊர்களில் நடந்த அத்தனை அட்டகாசங்களும்  மீறல்களும் பறிக்கப்பட வாகனங்களும் நமக்குத் தெரியும்.அத்தனை போக்கிரிகளும் கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இனக்குரோதம் என்ற ஒன்றே அரசியல் முதலீடாய் இருக்கும் தேசத்தில் ஒரு விடயத்தை செய்தியாக்கும் போது எத்தனை மெனக்கிட வேண்டி இருக்கிறது என்று பொறுப்பு வாய்ந்த அத்தனை பேருக்கும் தெரியும்.இந்த ஊடக அற ஒழுக்கங்களை எல்லாம் அடுத்தவன் சதையைப் புசித்து பிழைப்பவனிடம் எதிர்பார்க்க முடியுமா.

இந்த தேசத்தின் வாக்குவங்கி அரசியல்,மனிதர்களை மதத்தின் பெயரால் குதறுவதில் தங்கி இருக்கிறது.கொரானாவைவிட கொடிய இனதுவேச வைரஸ் , மனிதர்கள் மனங்களில் எப்போதோ ஆழ ஊடுருவிவிட்டது.தெரண தினமும் பருக்கும்  இனவாத பன்றி மலத்தைக் குடித்துக் கொண்டு இருக்கும் கூட்டம் பல இலட்சங்களில் தேறும்.இவர்கள் யாரும் ஃபேக் ஐடிக்கள் அல்ல.ரத்தமும் சதையுமான மனிதர்கள்.ஹிட்லரின் அமைச்சர் கோயபல்ஸ்ஸின் பொய் மூட்டைகளை ஜெர்மன் சமூகம் அப்போது நம்பிச் சுமந்தது.இங்கேயும் இரண்டு கோயபல்ஸ்கள். ஒன்று தெரண மற்றது ஹிரு.

பகுத்தறிவு உள்ளவர்கள் இந்த சீழ் வடியும் இலங்கை ஊடகங்களைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை.எவன் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கென்ன என்று இருந்து கொள்ளலாம். இலட்சக்கணக்கான மக்களை வாழவைத்து பன்முகத்தன்மையின் அடையாளங்களாய் திரியும் பெரும் தேசங்கள் அவசரமாய் மீள வேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம்....அப்பாவித்தனமாய் இந்த நாடு உருப்படும் என்று நம்பி வாழும் அம்பிகள் மட்டும் சத்துர என்பது சும்மா ஒரு just like case bro என்று தலையை வைத்து முட்டுக் கொடுத்துக் கொடுத்துக் கொள்ளலாம்.

(ஸபர் அஹ்மத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.