நாட்டில் இதுவரை 50,000ற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.


பெருமளவிலான பிசிஆர் பரிசோதனைகள் பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், 2019 டிசம்பர் மாதத்தில் சீனாவின் வூஹான் நகரிலிருந்து முதலாவது கொரோனா வைரஸ் தொற்று நோயாளி பதிவாகிய நிலையில் சுகாதார அமைச்சு பிசிஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. அதற்கிணங்க பொரளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டு அதனூடாக சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார அமைச்சின் முகாமைத்துவத்தின் கீழ் படிப்படியாக நாட்டில் உள்ள 15 ஆஸ்பத்திரிகளில் பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன் தனியார் துறை மற்றும் மருத்துவ பீடங்களின் ஒத்துழைப்போடு அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாவது நோயாளி இனங்காணப்பட்டதுடன் அவர் ஒரு சீனப் பிரஜையாகும். பெப்ரவரி மாதமளவில் கராபிட்டிய, கண்டி, ராகம மற்றும் அனுராதபுரம் ஆஸ்பத்திரிகளில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதேநேரம் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவபீடத்திலும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கிணங்க மார்ச் மாதத்தில் ஆறு பிசிஆர் பரிசோதனை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. தற்போது 19 பரிசோதனைக் கூடங்களில் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள் நான்கு தனியார் ஆஸ்பத்திரிகளும் 3 மருத்துவ பீடங்களும் உள்ளடங்குகின்றன. தற்போது 50,000ற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளன. அதில் 16 ஆயிரத்து 59 பிசிஆர் பரிசோதனைகள் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் ஸ்ரீஜயவர்தனபுர மருத்துவ பீடத்தில் 6096 பரிசோதனைகளும் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் 5798 பரிசோதனைகளும் கராபிட்டிய வைத்தியசாலையில் 4765 பரிசோதனைகளும் கண்டி தேசிய வைத்தியசாலையில் 3640 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நாளொன்றுக்கு சுமார் 3,000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேவைப்படின் எதிர்காலத்தில் தினமும் 6,000 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சேவைகள் விரிவுபடுத்தப்படவுள்ளன.
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் நாட்டின் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.