பதினெட்டாவது தொடர்..................

சதாமின் தவறான அரசியலும், வளைகுடா போரும், ஈரானின் நிலைப்பாடும், அமெரிக்க படைகளின் வருகையும்


சதாம் ஹுசைன் மூலமாக ஈரானை ஆக்கிரமிப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததனால் ஈரான் – ஈராக் ஆகிய நாடுகளுக்கிடையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது.. பின்பு 1988 இல் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதுபோல் குவைத்தை ஆக்கிரமித்ததற்காக ஐக்கிய நாடுகள் சபையால் 1990 இல் ஈராக் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

குவைத், சவூதி அரேபியா ஆகிய எல்லைகளில் உள்ள தனது எண்ணை வயல்களிலிருந்து இரு நாடுகளும் மசகு எண்ணையை திருடி உள்ளதாக சதாம் ஹுசைன் குற்றம் சுமத்தியதுடன், குறித்த இரு நாடுகளின் எல்லைகளில் ஈராக்கிய படைகள் குவிக்கப்பட்டது.

முதலில் குவைத்தை கைப்பேற்றிவிட்டு பின்பு சவூதி அரேபியா மீது படையெடுப்பதுதான் சதாமின் எண்ணமாக இருந்தது. இதனை தடுப்பதற்காக பல அரபு நாடுகள் கடுமையாக முயற்சி செய்தன.

உலகின் நான்காவது பலம்வாய்ந்த ஈராக்கிய படைகளோடு நேருக்கு நேர் நின்று போர்புரிகின்ற இராணுவ பலம் குவைத்திடமும், சவூதி அரேபியாவிடமும் அப்போது இருக்கவில்லை. தங்களை சுற்றிவர அரபு நாடுகள் இருந்ததனால் அவ்வாறு இராணுவத்தை கட்டியமைக்கும் தேவையும் இந்த இரு நாடுகளிடமும் இருக்கவில்லை.

இறுதியாக எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக் அவர்கள் ஈராக்குக்கு சென்று நிலைமையை விளக்கியதுடன், குவைத் ஆக்கிரமிக்கப்பட்டால் அமெரிக்க படைகள் மத்தியகிழக்கில் காலூன்றிவிடும் என்று முன்னெச்சரிக்கை விடுத்திருந்தும் அதற்கு சதாம் இணங்கவில்லை.

ஈரான் மீது போர்புரிந்தபோது நண்பர்களாக இருந்து தாராளமாக உதவி செய்த அரபு நாடுகள் அனைத்தும் குவைத் விடயத்திலும் தனக்கு தொடர்ந்து ஆதரவு வழுங்கும் என்றே சதாம் எதிர்பார்த்தார்.

ஆனால் குவைத் மீதான ஆக்கிரமிப்பில் பார்வையாளராகவும் இருக்காமல் சதாமுக்கு எதிராக  யுத்தத்துக்கு தயாரானதோடு அமெரிக்க மற்றும் நேச நாட்டு படைகள் தளம் அமைப்பதற்கும் அனைத்து அரபு நாடுகளும் இடம் வழங்கியது.

ஆனால் எட்டு வருடங்களாக போர்புரிந்த தனது எதிரியான ஈரான் மட்டும் இந்த யுத்தத்தில் பங்கெடுக்கவுமில்லை. அத்துடன் நேச நாடுகளுக்கு உதவி செய்யவுமில்லை. அப்போது ஈரானின் நீண்ட எல்லைப் பிரதேசமே சதாமுக்கு பாதுகாப்பாக இருந்ததோடு ஈராக்கின் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் கூட்டுப்படைகளிடமிருந்து பாதுகாப்பதற்காக ஈரானுக்குள் தஞ்சமடைந்தது.

அப்போது நீண்ட போர் அனுபவத்துடன் 16 இலட்சம் படைவீரர்கள் கொண்ட உலகின் நான்காவது சக்திமிக்க படைபலம் கொண்ட நாடாக ஈராக் இருந்தது.

சதாமிடமிருந்து குவைத்தை மீட்பதற்காக 1991 ஜனவரி 17 இல் ஈராக் மீது வான்வழி தாக்குதல் ஆரம்பமானது. குவைத்தில் நிலைகொண்டிருக்கும் ஈராக்கிய படைகள் மீதே கூட்டுப்படைகள் தாக்குதல் நடாத்தும் என்று சதாம் எதிர்பார்த்தார்.

ஆனால் ஈராக்கிய தலைநகர் பக்தாத் உட்பட ஈராக்கின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள், கட்டளை மைய்யங்கள், விமான எதிர்ப்பு நிலைகள், விநியோகப்பதைகள் மீது ஒரே தடவையில் கூட்டுப்படைகளின் 700 விமானங்களும், கடலிலிருந்து கப்பல்கள் மூலமாகவும் தாக்குதல் நடாத்தப்பட்டது.

ஒரு மாதத்துக்கும் மேலாக ஈராக்கின் நிலைகள் மீது தொடர்சியான விமானத்தாக்குதல் நடாத்தப்பட்டு கொண்டிருக்கையில்  ஈராக்கிய இராணுவமே வலிந்துசென்று 1991 பெப்ரவரி 23 இல் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்தது. இந்த யுத்தத்தை ஈரான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

இறுதியில் ஈராக்கிய படைகள் குவைத்தைவிட்டு வெளியேறியது. கூட்டுப்படைகள் ஈராக்மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் இஸ்ரேல்மீதும், சவூதி அரேபியாவில் இருந்த அமெரிக்க நிலைகல்மீதும் ஈராக் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடாத்தியது.

கூட்டுப்படைகளின் விமானத்தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி ஈராக்கிய மக்கள் கொல்லப்பட்டார்கள். அமெரிக்க விமானத் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட காணொளிகள் அப்போது சர்வதேச ஊடகங்களில் வெளிவந்தது. ஆனாலும் அது குறி தவறிய தாக்குதல் என்று அமெரிக்கா நியாயம் கூறியது.

அத்துடன் அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்திருந்த முஸ்லிம் நாடுகளுக்கு தெரியாமல் இஸ்ரேலிய விமானங்களும் ரகசியமாக ஈராக்மீது விமானத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்தது.

ரஷ்யாவுக்கு போட்டியாக அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டு வெளியுலகுக்கு காண்பிக்காது வைத்திருந்த அதி நவீன ஆயுதங்களும் மற்றும் ராடரில் படாமல் துல்லியமாக தாக்கும் திறன்கொண்ட F117 விமானமும் இந்த யுத்தத்தில் அமெரிக்கா அறிமுகப்படுத்தியது.

குவைத்தை ஈராக்கிடமிருந்து மீட்பதற்காக மத்தியகிழக்கில் உள்ள அரபு நாடுகளில் காலூன்றிய அமெரிக்க படைகள் இன்று வரைக்கும் நிரந்தர தளம் அமைத்து நிலைகொண்டுள்ளார்கள். இது அமெரிக்காவாலும், யூதர்களினாலும் நீண்டதூர திட்டமிடலுக்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இந்த யுத்தத்தில் தோல்வியடைந்தாலும் உலகின் சக்திவாய்ந்த வல்லரசு உட்பட 28 நாடுகளுடன் தனித்துநின்று ஈராக்கிய படைகள் போரிட்டார்கள். இதனால் முஸ்லிம் உலகிலும் அதற்கு வெளியிலும் சதாம் ஹுசைனுக்கு மாவீரர் என்ற அந்தஸ்து கிடைத்தாலும் சதாமின் தவறான அரசியல் நகர்வுகள்தான் மத்தியகிழக்கில் அமெரிக்க படைகளின் வருகைக்கு வழிவகுத்தது.

யூதர்கள் அமெரிக்கா மூலமாக சதாமை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். இதனை பின்புதான் சதாம் உணர்ந்தார்.

அமெரிக்காவை எதிர்த்தால் மட்டும் அவர் உண்மையான முஸ்லிமாக இருந்துவிட முடியாது. அவரது ஆட்சியில் ஜனநாயகம் இருக்கவில்லை. அத்துடன் இஸ்லாமிய ஆட்சியும் இருக்கவில்லை. மாறாக சர்வாதிகாரம் தலைவிரித்தாடியது.

தன்னை எதிர்த்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். உரிமைக்காக போராடிய குர்திஸ் இன மக்கள் மீது இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டு மனிதப் படுகொலைகள் நடைபெற்றதாகவும் செய்திகள் உள்ளன.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

தொடரும்...................................

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.