கம்பஹா, கேகாலை மாவட்ட மக்கள் பொதுவாக ஈராப்பலா வை ஈரப்பிலா என்று அழைப்பது வழக்கம். பலாவைப் போன்று சமைத்து சாப்பிடமுடியும், மாலை நேரங்களில் நொறுக்குத்தீனியாக சாப்பிடவும் முடியும். சிலர் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்துச்சாப்பிடுவர். வேறு சிலர் சீனியை பாகு வடிவில் காய்ச்சி பொறித்த ஈரப்பலாவை அதில் இட்டுச் சாப்பிடுவர்.

கி.பி 1658 -1796 காலப்பகுதியில் ஒல்லாந்து நாட்டவர்கள் அல்லது டச்சுக்காரர்கள் அல்லது நெதர்லாந்து நாட்டவர்கள் இலங்கையை காலனியாக கட்டுப்பாட்டில்  வைத்திருந்தார்கள். சமகாலத்தில் இன்றைய இந்தோனேசியாவும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கை  இராணுவ சேவையில் பணியாற்றுவதற்காக மலாய் இனத்தவர்களை 17ம், 18ம் நூற்றாண்டுகளில் டச்சுக்காரர்கள் இலங்கைக்கு அழைத்துவந்தார்கள். பத்தாவியா, ஜவா, சுமாத்ரா, மலேசியா போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இலங்கையின் இராணுவத்தில் இணைந்துகொண்டார்கள்.

இலங்கை வந்து மலே இனத்தவர்களுக்கு உள்நாட்டு பாரம்பரிய உணவுகளில் அவ்வளவாக நாட்டம் இருக்கவில்லை. தாய் நாட்டில் சாப்பிட்ட ஈரப்பலாவை அவர்களால் எளிதாக விட்டுவிடவும் முடியவில்லை. எனவே தமக்கு ஈரப்பலா உணவுக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஒல்லாந்து நிர்வாகத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.

எனவே முதல் தடவையாக இலங்கைக்கு ஒல்லாந்தர் ஈரப்பலாவை அறிமுகம் செய்தார்கள். முதலாவது ஈலப்பலா மரக்கன்று காலி கோட்டையில் நாட்டப்பட்டது. அந்த இடத்தை இன்றும் காலிக் கோட்டையின்  Akersloot Bastion பகுதியில் பார்வையிட முடியும்.

ஆனால் டச்சுக்காரர்களின் நோக்கம் வேறுவிதமாக இருந்தது. ஈரப்பலா அதிகம் உஷ்ணம் கொண்ட உணவு; எனவே இதனைச் சாப்பிடும் இலங்கையர்கள் அதிக உஷ்ணம் காரணமாக நோய் வாய்ப்படலாம் அல்லது மரணித்துவிடலாம் என்று என்று நினைத்தார். 

ஈரப்பலா அதிக உஷ்ணம் கொண்ட உணவு என்பதை அறிந்துகொண்ட இலங்கை மக்கள் உஷ்ணத்தை தணிக்க "தேங்காய் பாலை" பயன்படுத்தினார்கள் இதனால்   உணவின் உஷ்ணம் குறைந்ததோடு, உணவும் சுவையாக மாறியது.

ஈராப்பலா டச்சு இராணுவத்தில் பணியாற்றிய மலே இராணுவத்தினருக்கு பிரதான உணவுவேளைகளில் வழங்கப்பட்டதாகவும் அவர்கள் ஒரு தட்டில் வழங்கப்பட்ட உணவை  ஆறு ஐந்து பேராக  அமர்ந்த வட்டவடிவில் அமர்ந்து சாப்பிட்டதாகவும் பிற்காலத்தில்  இதுவே "ஸஹன் அல்லது ஸவான்" முறையாக மாறியிருக்கலாம் என்றும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமியத்துறையின் முதலாவது பேராசிரியர் S.I இமாம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

பஸ்ஹான் நவாஸ்
செய்தி ஆசிரியர்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.