நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாடு முழுவதும் நாளை முதல் நிர்வாக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் கீழ் அரச மற்றும் தனியார் துறைகளை திறக்கும் நடவடிக்கை நாளை தொடக்கம் ஆரம்பமாகவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு அன்றி வேறு எந்தவித நடவடிக்கைகளுக்காகவும் பொதுமக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி நகரங்களுக்கு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாளைய தினம் நாட்டில் நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்ப்பது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தை மட்டுமேயாகும் என்று தெரிவித்த அமைச்சர் இதனால் பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். கடந்த வாரத்தில் சமூகத்தின் மத்தியில் கொரோனா வைரசு தொற்று நோயாளர்கள் பதிவாகவில்லை என்பதை கவனத்தில் கொண்டே அரசாங்கம் மீண்டும் நாட்டில் பகுதியளவிலான நிர்வாக பணிகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
விசேடமாக கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தை மற்றும் சுதுவெல்ல போன்ற பகுதிகளில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று நோயாளர்கள் பதிவாகவில்லை. வெலிசறை கடற்படை முகாமில் பாதிக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களுடன் நெருக்கமாக தொடர்புகொண்டிருந்தவர்கள் மாத்திரமே நோயாளர்களாக அடையாளங் காணப்பட்டனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். நாளைய தினம் நாட்டில் வழமை நிலை இடம்பெறுவதாக கூறி இவர்கள் வீடுகளில் இருந்து வெளியேறக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதே போன்று அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியேறுவது பொருத்தமாகும். தற்பொழுது இந்த கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவது மிக முக்கியமாகும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.