சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இன்றியதான ஜனாதிபதியின் கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணி உருவாக்கம் ஏற்புடையதல்ல = முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா
இலங்கையிலே அனைத்து இன மக்களும் சமமான முறையில் வாழுகின்ற ஒரே ஒரு மாகாணமாக திகழுகின்றது கிழக்கு மாகாணம், அதேவேளை வரலாற்றிலே தமிழ் முஸ்லிம் சிறுபான்மை இன மக்களது தாயகமாக பதிவு செய்யப்பட்ட கிழக்கிலே உள்ள தொல்பொருள் அமைவிடங்களின் அளவீடுகளை மேற்கொள்வதற்காக , சிறுபான்மை மக்களது பங்குபற்றல் இன்றி ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட விசேட செயலணி ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா தனது கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளார் ,
கிழக்கின் பல்வேறு தொல்பொருள் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளின் அமைவிடங்கள் அழிந்து போவது தொடர்பில் பௌத்த ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்ட போது பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் செயலணி ஒன்றை அமைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டுவிட்டர் கருத்திற்கு பதிலாக தனது கண்டன கருத்தையும் கவலையையும் அலி ஸாஹிர் மௌலானா பதிவிட்டுள்ளார்.
நீண்ட காலமாக சர்ச்சைக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு வரும் அமைவிடங்களை கொண்டதும் , சிறுபான்மை சமூகங்கள் வாழும் கிழக்கின் தொல்பொருள் அமைவிடங்கள் தொடர்பான அளவீடுகளை ஆய்வு செய்வதற்காக எவ்வித சிறுபான்மை சமூகங்களது பிரதிநிதிகளது பங்களிப்பும் இன்றி ஒரு செயலணியினை ஜனாதிபதி உருவாக்கியிருப்பது கவலை அளிக்கின்றது,
சர்ச்சைகள் நிலவும் பகுதி என்பதால் அப்பகுதிகளில் உள்ள தமிழ் முஸ்லிம்களது கருத்துக்களையும் உள்வாங்கும் வகையிலான பிரதிநிதிகளை கொண்ட வகையில் செயலணியினை அமைப்பதை விடுத்து , ஏனைய சமூகங்களை புறந்தள்ளி விட்டு இனரீதியான பாகுபாட்டுடன் அமைக்கப்பட்டுள்ளமை ஒருபோதும் ஏற்புடையது அல்ல, அனைவரையும் உள்வாங்கியதான செயலணி மூலமே சந்தேகங்கள் அற்ற , தெளிவுகள் நிறைந்த முக்கியத்துவங்களை பிரதிபலிக்கக்கூடிய , அனைவராலும் மதிக்கத்தக்க ஒரு நிறைவான அறிக்கையை பெற முடியுமாக இருக்கும்.
தொல்பொருளியல் இடங்களை பாதுகாத்தல் என்பது பல தரப்பினரதும் பங்கேற்புடன் , அனைத்து சமுதாயங்களும் தொடர்பான வரலாற்று , கலாசார , மற்றும் மதரீதியான முக்கியத்துவத்தை மதிக்கக் கூடிய வகையில் கையாளப்படல் வேண்டும், அதற்காக இச்செயலணிக்கு தலைமை தாங்குவதற்கு பல்வேறு வேலைப்பழுக்களை கொண்ட பாதுகாப்பு செயலாளரை விட இந்தத் துறையிலே ஆற்றலும் பூரண அறிவும் , நிறைவான அனுபவம் மிக்க துறைசார் நிபுணர்களது வழிகாட்டலே பொருத்தமானதாகும், ஏன் இதற்கு பாதுகாப்பு செயலாளர் தலைமை வகிக்கிறார் ? இந்தச் செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமுதாயங்களின் பிரதிநிதிகளை உள்வாங்காமை ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள அதே வேளை , இலங்கையில் உள்ள சிறுபான்மை சமுதாயங்களுக்கு சொந்தமான தொல் பொருளியல் இடங்களின் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை பொருட்படுத்தாது, நாடளாவிய இனவாத நடவடிக்கைகளை போன்று கிழக்கின் சிறுபான்மையினரை இரண்டாம் பட்சமாக காட்டுகின்ற செயற்பாடாக அமைந்துள்ளதை உணரமுடிகின்றதா, இல்லையா எனவும் கேட்டுள்ளார்.
அனைவரும் ஒன்றுபட்டு நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் இந்த அரசு உளத்தூய்மையுடன் அக்கறை கொண்டதாக இருந்தால், சமமான சனத்தொகை பகிர்வினை கொண்ட கிழக்கு மாகாணம்தான் அதற்கு பொருத்தமான இடம் என நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன், இந்நிலையில் இந்த செயலணி நியமனமானது அனைத்திற்கும் மாற்றமாக உள்ளமை மிகவும் கவலை அளிப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.