(எம்.எப்.எம்.பஸீர்)


கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2 ஆம் மாடியில் உள்ள அறை ஒன்று இன்று (04) சி.ஐ.டி.யினரால் அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது
நாட்டில் 8 இடங்களில் கடந்த வருடம், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21 ஆம் திகதி) இடம்பெற்ற தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் புத்தளம் பிரதேசத்தின் அமைப்பு ஒன்றும் தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் சி.ஐ.டி. தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்த நிலையில் அதன் பொறுப்பாளராக செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் நடத்தி வந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகம் ஒன்று, கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் 2 ஆம் மாடியில் உள்ள அறை ஒன்றில் இயங்கி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று சி.ஐ.டி.யினரால் அந்த பள்ளிவாசல் அறை அதிரடியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது அங்கிருந்து பல ஆவணங்கள், குறித்த அமைப்புக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்டவை சி.ஐ.டியால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து தற்போது அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இதனைவிட குறித்த சந்தேக நபருடைய அமைப்பின் பிரதான அலுவலகம் புத்தளம் , மதுரங்குளி, அசார் நகரை மையப்படுத்தி இயங்கியதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதுவும் சீல் வைக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்விரு இடங்களிலிருந்தும் மீட்கப்பட்ட ஆவணங்கள், பற்றுச் சீட்டுக்கள், புத்தகங்கள், சஞ்சிகளை சிறப்பு குழு ஆராய்ந்து வருவதாகவும், அவ்வமைப்புக்கு நிதி அளித்தவர்கள் உள்ளிட்ட விடயங்களை கண்டறிய விசேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.