கொவிட்-19 உடலங்களைப் புதைப்பதா ? எரிப்பதா ?


மும்பை சிவில் மேல்நீதிமன்றத்தின்           வரலாற்று சிறப்புமிக்கதொரு தீர்ப்பு


(அஜாஸ் முஹம்மத்)

பிரதம நீதிபதி தீபங்கர் தட்டா மற்றும் நீதிபதி எஸ்.எஸ். ஷின்டே என்பவர்களால் விரிவாக விசாரிக்கப்பட்டு, 38 பக்கங்கள் கொண்ட தெளிவான, கூர்மையான தீர்ப்பு ஒன்று கடந்த மே 22 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் இவ்வழக்கானது இரண்டு ரிட் மனுக்கள் மீதான விசாரணையாகும். முதலாவது ரிட் மனுவானது றியாஸ் அஹமட் முஹம்மட் மற்றும் ஏனையோர் மகாராஷ்டிரா மாநில அரசு மற்றும் ஏனையோருக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது.
இரண்டாவது ரிட் மனுவானது சம்ஸர் அஹமட் ஷேக் என்பவரால் மும்பை மாநகர ஆட்சிக்கு எதிராகத் தொடுக்கப்பட்டது.

பிரதம நீதிபதி தீபங்கர் தட்டா தனது தீர்ப்பின் ஆரம்பத்திலேயே ஒஸ்கார் வைல்ட்டின் புகழ்மிக்கதொரு கவிதையின் சில வரிகளைக் கொண்டு ஆரம்பிக்கிறார்.

'மெல்லிய மண்ணில் தன் தலைக்கு மேலே அசைந்தாடும் புல், பூண்டுகளுக்குக் கீழே அமைதியை மட்டுமே செவிமடுத்துக் கொண்டு நேற்றுமில்லாத, நாளையுமில்லாத காலத்தையே மறந்து ஏன் வாழ்க்கையையே மறந்துவிட்ட முழுமையான அமைதிமிக்கதாய் அமையும் மரணமானது நிச்சயமாகப் பேரழகுமிக்கது.'

உண்மையில் அந்த வழக்குத் தீர்ப்பானது மிகச் சிறந்த உலகத்தரம் வாய்ந்ததோர் இலக்கியப் படைப்பாகக் கொள்ளப்படத்தக்கது. நீதி தேவைதையே நேரில் வந்தமர்ந்து ஓர் இறைத்தூதர் பிரசங்கிப்பது போல நேர்த்தியாக அமைந்துள்ள தீர்ப்பு அது.
வழக்கின் பின்னணி
தற்போதைய ஆட்சி இந்தியாவில் அமைந்ததன் பின்னர் ஒட்டுமொத்த இந்தியாவின் ஆன்மாவே துடிதுடித்துச் செத்துக் கொண்டிருக்கிறது.

நீதிக்காகப் போராடிய ஒரே காரணத்துக்காகப் படுகொலை செய்யப்பட்ட அண்ணல் மகாத்மா காந்தி மகான் புறந்தள்ளப்பட்டு, அவரைச் சுட்டுக் கொன்ற கோட்ஸே, அரசாங்கத்தாலேயே கொண்டாடப்படும் அவலமெல்லாம் இந்தியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
குண்டர்களின் ஆட்சி நடக்கிறது. இந்தியா என்ற பெயரையைக் கூட 'பாரதம்' என்று மாற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே நிராகரிக்கப்பட்ட நிகழ்வும் அண்மையில் நடந்து முடிந்துள்ளது.

முழுமையாகவே செத்துவிடாமல் இன்றும் இந்திய நீதித்துறை மட்டும் நம்பிக்கை தரும் வண்ணம் ஓரளவுக்குத் தப்பிப் பிழைத்துள்ளது இதுவரை !
தொடர்ந்து முஸ்லிம்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கும் தற்போதைய இந்திய ஆட்சியானது அண்மைய கொவிட் - 19 விவகாரத்திலும் முஸ்லிம்கள் மீது குறி வைத்து செயற்படத் தொடங்கியுள்ளது. அது முதலாவதாக மகாராஷ்டிராவில் தொடங்கியது.

கொவிட் - 19 ஆல் இறக்கும் எல்லோரும் கட்டாயமாக எரிக்கப்பட்டே ஆக வேண்டும். புதைக்கப்பட முடியாது என்று மகாராஷ்டிரா அரசு 2020 மார்ச் 13ஆம் திகதி பிரகடனம் செய்தது.

1897ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்த தொற்று நோய்கள் தடுப்புச் சட்டத்தின் 02,03 மற்றும் 04ஆம் பிரிவுகளின் கீழ்த்தான் அந்தப் பிரகடனம் அமைந்திருந்தது.

இலங்கையில் நடந்ததைப் போலவே மஹாராஷ்டிராவிலும் அடுத்த நாளே அதாவது 2020 மார்ச் 14ஆம் திகதி அந்தப் பிரகடனம் திருத்தி வெளியிடப்பட்டது.

திருத்தி வெளியிடப்பட்ட அந்த ஒழுங்கு விதிகளில் சொல்லப்பட்ட பல்வேறு விடயங்களில் மிகவும் முக்கியமான விடயங்கள் - கொவிட் - 19 ஆல் மரணிக்கும் எல்லோரும் அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் கட்டாயமாக எரிக்கப்பட்டே ஆக வேண்டும், எந்தவிதமான மத அனுஷ்டானங்களும் செய்யப்படக்கூடாது, எரிக்குப்போதுகூட இறந்தவர்களின் குடும்பத்தின் சார்பில் 5 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பன போன்ற விடயங்களாகும்.
பின்னர் மீண்டும் அந்த ஒழுங்கு விதிகள் 2020 மார்ச் 30ஆம் திகதியிலும் பின்பு 2020 ஏப்ரல் 09ஆம் திகதியிலும் மேலும் மேலும் இறுக்கமான விதிகளை உள்ளடக்கித் திருத்தித் திருத்தி வெளியிடப்பட்டன.

2020 மார்ச் 30ஆம் திகதி செய்யப்பட்ட திருத்தங்களின்படி முஸ்லிம் ஒருவர் கொவிட் - 19ஆல் மரணித்தால் அவரை அடக்கம் செய்வதற்கான சலுகை வழங்கப்பட்டது.

ஆனால் அடக்கம் செய்வதற்கென மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் அல்லாத தூரப் பிரதேசங்களில் உள்ள மூன்றே மூன்று முஸ்லிம் மையவாடிகளில் மட்டுமே அடக்கம் செய்யப்பட முடியும் என்றும் அந்தச் செயன்முறையையும் சரியாகச் செய்வதற்கென்று ரஸா அகடமி எனும் அமைப்பைச் சேர்ந்த பெயர் குறிப்பிட்ட மூவருக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திருத்தத்தில் வழங்கப்பட்ட "முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்படலாம்" எனும் சலுகையை எதிர்த்து பிரதீப் காந்தியும் ஏனையோரும் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தனர். அந்த ரிட் மனுவின் இடைக்காலக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, முஸ்லிம்களின் உடலங்கள் புதைக்கப்படலாம் அவர்களின் குடும்பங்களும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளோடு இறுதிச் சடங்குகளைச் செய்யலாம், அதற்குப் பொலிஸார் உதவியாக இருக்க வேண்டும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அந்தக் கட்டளைக்கு எதிராக மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. இதில் மிகப் பெரிய வேடிக்கை என்னவென்றால், மேன்முறையீடு செய்த வழக்கறிஞர் சிங் தன் மேன்முறையீடுகளுக்குக் கீழ்வரும் இரண்டு அடிப்படைகளை சுட்டிக் காட்டியுள்ளார்.

1. இலங்கையிலும் கொவிட் 19 ஆல் மரணிக்கும் முஸ்லிம் உடலங்கள் கட்டாயமாக எரிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

2. டாக்டர் எஞ்சலா என். போல்ட்வின் என்பவர் பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரை. இந்த இரண்டு விடயங்களையுமே தனது மேன்முறையீடுகளுக்கான காரணங்களாகச் சிங் சுட்டிக் காட்டியிருந்தார்.

கொத்து ரொட்டியில் மலட்டு மருந்து போட்டு மக்களை மலட்டுத் தன்மைக்கு உட்படுத்தலாம் என்று நம்பும் அதி புத்திசாலிகளைக் கொண்ட இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டுள்ள வழக்கறிஞரின் புத்திசாலித்தனத்தைக் கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.

அடுத்து, குறித்த ஒரு டாக்டர் பத்திரிகை ஒன்றில் எழுதியிருந்த கட்டுரை. இவ்விரண்டு விடயங்களையும் பிரதம நீதிபதி மிகவும் சுவாரசியமாக அலசி ஆராய்ந்து சுட்டிக்காட்டி மேன்முறையீட்டின் அடிப்படைகளை நிராகரித்துள்ளார்.

தன் வாதங்கள் அடிபட்டுப் போனவுடன் சிங், இந்தப் பிரச்சினையை வேறொரு திசையில் மேன்முறையீடு செய்தார்.

1984இல் உத்தரப் பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்ட 1984-01SSC81 இலக்க வழக்குத் தீர்ப்பு மற்றும் அலகாபாத் மேல்நீதிமன்றத்தின் 2011-13SSC61 இலக்க வழக்குத் தீர்ப்பு ஜாக்லாண்ட் மேல்நீதிமன்றத்தில் 2020-04-17ஆம் திகதி வழக்கிலக்கம் (WP- 1304) தீர்ப்பு ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிச் சனநெருக்கடியான இடங்களில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடிகளில் முஸ்லிம்களின் உடலங்கங்களை புதைப்பதால் இந்திய அரசியலமைப்பின் 21ஆம் பிரிவில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள 'உயிர்வாழும் உரிமை' மீறப்படுவதாக வாதிட்டார்.

(இலங்கையின் அரசியல் யாப்பில் இந்த உயிர்வாழும் உரிமை உத்தரவாதம் அளிக்கப்படவில்லை)

இந்த வாதப் பிரதி வாதங்களையெல்லாம் அழகாகப் பரிசீலித்த பிரதம நீதிபதி உலக சுகாதார அமையத்தால் 2020 மார்ச் 24ஆம் திகதி கடைசியாக வெளியிடப்பட்ட கொவிட் - 19 கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் 2020 மார்ச் 15ஆம் திகதி இந்திய அரசால் வெளியிடப்பட்ட கொவிட் -19 கட்டுபாட்டுச் சட்ட ஒழுங்கு விதிகளை அடிப்படைகளாகக் கொண்டு தனது தீர்ப்பை வழங்கினார்.

அத்தீர்ப்பில் வெளியிடப்பட்டுள்ள பொன்னான கூற்றுக்களில் சில...

1. கொவிட் -19ஆல் இறந்தவர்களிடமிருந்து பிறருக்கு நேரடித் தொற்றுகள் ஏற்படும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான ஆதாரங்களும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

2. புதைப்பதால் பிறருக்கு கொவிட் - 19 தொற்றலாம் என்பது இதுவரை நிரூபிக்கப்படாத வெறும் ஒரு தவறான நம்பிக்கை மட்டுமே என்று உலக சுகாதார நிறுவனமே சொல்லியுள்ளது.

3. எரித்தல் எனும் விவகாரத்தை முஸ்லிம்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு பேசாமல், மும்பையில் வாழும் ஏனைய கிறிஸ்தவ, யூத, சீன இனத்தவர்களையும் கருத்திற் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

4. ஒவ்வோர் இனத்துக்கும் அவர்களுடைய கண்ணியமும் அங்கீகாரமும் கொடுக்கப்பட வேண்டும்.

5. கொவிட் - 19ஆல் இறக்கும் ஒருவரின் மொத்த உடலிலும் நோய்க்கிருமிகள் பரவுவதில்லை. மொத்த உடலும் கெடுவதும் இல்லை. மாறாக அவரது நுரையீரல் மட்டுமே பழுதடைகிறது. அப்படி இறப்பவரின் உடலைச் சரியாக மூடி முத்திரையிட்டுவிட்டால் அந்த உடலிலிருந்து எவ்வகையிலும் கிருமிகள் வெளியே பரவாது என்று இதுவரை அறிவியல் உறுதி செய்துள்ளது.

ஆதலால் இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ள ஒழுங்கு விதிகள் மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனம் செய்துள்ள கொவிட் - 19 கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் மற்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு ஏற்ப மகாராஷ்டிரா மாநகர சபை ஆணையாளர் விடுத்துள்ள திருத்தச் சுற்றுநிரூபத்தை நாம் நிராகரிக்கிறோம். அது சட்ட ரீதியானது அல்ல. கொவிட் - 19 ஆல் இறப்பவர்கள் எல்லோரதும் உடலங்களும் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் எனச் சொல்லுவது சட்ட விரோதமானது. ஒவ்வொரு இனத்தவரதும் மத நம்பிக்கைகள், கலாசாரங்கள் மதிக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் உயிர்வாழும்போது மட்டுமல்ல, இறக்கும் போதும் கண்ணியப்படுத்தப்பட உரித்துடையவன் - என அந்தத் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

NAVAMANI - 12.06.2020

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.