(ஆதிப் அஹமட் ஆதம்லெப்பை)

தென்னிலங்கை அரசியலில் பல்வேறு கட்டங்களில் முக்கிய கதாப்பாத்திரம் வகித்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்ற தேர்தலிலிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அண்மையில் அறிவித்திருந்தார். இது நாடு பூராகவும் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலையினை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்த நாட்டில் சிறுபான்மையினராக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுக்கு அது ஒரு அதிர்ச்சி மிகுந்த செய்தியாகத்தான் இருந்தது.

வாக்கினை மையப்படுத்தி சிறுபான்மை மக்களின் மீது இனவாதப்பிரச்சாரங்களை அள்ளி வீசுகின்ற பல்வேறு பெரும்பான்மை அரசியல் வாதிகளின் மத்தியில் மங்கள சமரவீர சற்றே வித்தியாசமானவர். எப்போதும் கடும்போக்குவாத பெரும்பான்மை அரசியல் போக்கினை கடுமையாக எதிர்ப்பவர். அவரின் அரசியல் பிரவேச காலம் தொடக்கம் இன்று வரைக்கும் சிறுபான்மை மக்களின் நலனுக்காக குரல் கொடுப்பவர். அதையும் தாண்டி சிறுபான்மை சமூகங்களின் மீதான அடக்குமுறைகளின் போதெல்லாம் அவற்றை முறியடிக்க மும்முரமாக செயற்பட்ட நடுநிலையான ஒரு அரசியல்வாதி. இதன் காரணமாக தான் சார்ந்திருக்கும் பெரும்பான்மையினரின் பலமான எதிர்ப்புக்களையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பாதித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்கள் தரப்பிலான நியாயங்களை பெரும்பான்மையின மக்களிடம் கொண்டுசேர்ப்பதில் இவர் பெரிதும் பங்காற்றிய ஒரு நடுநிலையான அரசியல் தலைவர். சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் தலைவர்கள் அவர்களின் பக்க நியாயங்களை பெரும்பான்மை மக்களிடம் கொண்டுசேர்ப்பதை விடவும் இவ்வாறான பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளே சிறுபான்மை மக்களின் நியாயங்களை பெரும்பான்மை மக்களிடம் கொண்டுசேர்ப்பது இலகுவானதும் வெற்றியளிக்கக்கூடிய பொறிமுறையுமாகும்.

மங்கள சமரவீர அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பெரிதும் புரிந்துகொண்டு அவர்களுக்கு தீர்வுத்திட்டம் வழங்கப்பட வேண்டுமென திறந்த மனதோடு ஆர்வம் கொண்டிருந்தார். ஆர்வம் என்பதையும் தாண்டி பல்வேறு செயற்பாடுகளையும் அதற்காக முன்னெடுத்ததோடு பெரும்பான்மை மக்களிடம் அதற்கான நியாயங்களையும் தெளிவுபடுத்தினார். இதற்காக பல்வேறு பணிகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் ஆற்றினார். அதுபோலவே முஸ்லிம் சமூகம் மீதான இனவாத நெருக்குதல்களின் போதெல்லாம் பலமாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்த ஒரு ஜனநாயகவாதி. முஸ்லிம் சமூகமானது இந்த நாட்டுக்கு செய்த சேவையை கவனத்தில் எடுத்துக்கொண்டால் அவர்களை சிறுபான்மை  இனம் எனக்கூறவே முடியாது என தைரியமாகச் சொன்னவர்.

கடந்த வருடம் ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னராக முஸ்லிம் சமூகம் மீதான இனவாத ரீதியிலான குரல்கள் வலுப்பற்ற போது முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாக தன்னுடைய  பலமான குரலை எழுப்பியிருந்தார். அதிலும் குறிப்பாக ஈஸ்டர் குண்டு தாக்குதலின் பின்னராக மினுவாங்கொடை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை மையப்படுத்தி சொத்து அழிப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட போது முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கும்,நாட்டின் பொருளாதாரத்துக்கும் ஆற்றுகின்ற பங்களிப்பை நினைவூட்டி பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பான உரையொன்றினை ஆற்றினார். இது இனவாதத்தை மையமாகக்கொண்டு அரசியல் பேசும் பலருக்கும் ஒரு பலத்த பதிலடியைக்கொடுத்தது எனலாம்.

இவ்வாறான ஒரு ஜனநாயபோக்கினை கொண்ட ஒரு அரசியல் பிரமுகர் திடீரென பாராளுமன்ற தேர்தலிலிருந்து விலகியுள்ளதாகவும் இம்முறை எவ்வாறான வாய்ப்புக்கள் வந்தாலும் பாராளுமன்றத்துக்கு செல்லப்போவதில்லை என அறிவித்திருப்பாதானது சிறுபான்மை சமூகத்தை பொறுத்த வரை ஒரு பெரும் இழப்பாகவே காணப்படுகின்றது. அவர் குறித்த முடிவினை எடுத்திருப்பதற்கான காரணங்களில் கூட சிறுபான்மை மக்களை மையப்படுத்திய பல்வேறு காரணங்களையும் ஊடகங்களுக்கு வழங்கியுள்ள செவ்வியில் சுட்டிக்காட்டியிருக்கின்றார். குறிப்பாக கடும்போக்கு இனவாத செயற்பாடுகள், கொரோனாவினால் உயிரிழந்த ஜனாசாக்கள் எரிப்பு மற்றும் மிருசுவில் கொலைக்குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைகளுக்கெதிராக இறுக்கமான எதிர்ப்புக்களை வெளியிட்டிருக்கிறார்.

ஆக சிறுபான்மை மக்களின் நலன்களிலும் அக்கறை கொண்ட ஒரு தாராள ஜனநாயக அரசியல் வாதியின் வெற்றிடமொன்று அமையப்போகின்ற பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ளது. இது எவ்வாறாயினும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு இழப்புத்தான்.. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.