(எம்.எப்.எம்.பஸீர்)

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலின் 2 ஆம், 3 ஆம் கட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், இலங்கையில் கொரோனா தொடர்பிலான அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை எனவும், அதனால் சுகாதார  அறிவுறுத்தல்களை  பேணி நடக்குமாறும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்த பொலிஸ் பேச்சாளரும், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானியுமான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்தார்.

அவ்வாறு உரிய சுகாதார முறைமைகளை கையாளாத அனைவரையும்,  நோய் தடுப்பு மற்றும் தனிமைப்படுத்தல் கட்டளைச் சட்டத்தை மீறியதாக அச்சட்டத்தின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.  

பொலிஸ் தலைமையகத்திலிருந்து நேற்று மாலை ஊடகங்களுக்கு விஷேட அறிவித்தல் ஒன்றினை விடுத்தார். இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
' இலங்கையில் கொவிட் 19 தொற்று அபாயம் முற்றாக இன்னும் நீங்கவில்லை. கடந்த மூன்று மாதங்களாக உரிய சுகாதார நடைமுறைகளை பேணி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் வழங்கிய ஆதரவை தொடர்ந்தும் வழங்க வேண்டும்.

அந்த 3 மாதங்களில் மக்கள் பின்பற்றிய சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும் நிரந்தரமாக பின்பற்ற முன்வர வேண்டும்.

குறிப்பாக சவர்க்காரம் இட்டு கை கழுவுதல், சமூக இடைவெளியை பேணல் மற்றும் முகக் கவசம் அணிதல் ஆகியவற்றை தொடர்ந்தும் பின்பற்றல் வேண்டும்.

நாட்டில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி செயற்படுவோருக்கு எதிராக நாம் நோய் தடுப்பு, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழும், குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை கண்டிப்பாக நடைமுறைப்படுத்துவோம். எனவெ உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும்.' என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.