லடாக்கின் கிழக்கே கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் சீன இராணுவம் கடந்த மாத தொடக்கத்தில் ஊடுருவியதால் இரு நாட்டு இராணுவங்களுக்கு இடையே மே 5 மற்றும் 6-ம் திகதிகளில் மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை குறைப்பதற்காக நடந்த பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளும் படை விலக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தன.

இந்த பணிகளின்போது கடந்த 15-ம் திகதி இரவு மீண்டும் இருதரப்பும் மோதிக்கொண்டன. இதில் இந்திய வீரர்கள் 20 பேரும், சீனா தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா ஊடுருவியதே இந்த மோதலுக்கு காரணம் என இந்தியா கூறியுள்ளது.

ஆனால் இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதால்தான் இந்த மோதலும் உயிரிழப்பும் ஏற்பட்டதாக சீனா குற்றம் சாட்டியது. கல்வான் பள்ளத்தாக்கு தங்களுக்கு சொந்தமானது எனவும், அந்த பகுதியில் கடந்த மாதம் 6-ம் திகதி இந்திய வீரர்கள் எல்லை தாண்டியதாகவும் மீண்டும் சீனா குற்றம் சாட்டி உள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:-

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா தொடர்ந்து தன்னிச்சையாக சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமானங்களை நடத்தி வருகிறது. இதற்கு சீனா பலமுறை தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. ஆனால் இதை கேட்காத இந்தியா உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியையும் தாண்டி வந்து ஆத்திரமூட்டும் செயல்களை செய்கிறது.


கடந்த மே 6ம் திகதி தடுப்பு வேலிகள் போன்றவை அமைப்பதற்காக கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை இந்திய வீரர்கள் தாண்டி வந்தனர். இது சீன வீரர்களின் ரோந்து பணிக்கு இடையூறாக அமைந்தது. அங்கு நிலவும் இயல்பு நிலையை குலைப்பதற்கு வேண்டுமென்றே தன்னிச்சையாக முயன்றனர்.

எனவே அன்று இருதரப்பு இராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரோந்து மற்றும் கட்டுமானங்களுக்காக கல்வான் நதிக்கரையை தாண்டமாட்டோம் என இந்தியா உறுதியளித்தது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து இரு தரப்பும் படைகளை விலக்குவது என முடிவெடுத்தது.

ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக கடந்த 15ம் திகதி மாலையில் இந்திய முன்கள வீரர்கள் மீண்டும் எல்லை தாண்டி வந்து அங்கு தணிந்திருந்த பதற்றத்தை குலைத்து விட்டனர்.

இவ்வாறு ஜாவோ லிஜியான் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.