கற்றுக்கொண்டதும்
காப்பாற்றிக்கொள்ள வேண்டியதும்
..............................

வீட்டோடு அடைக்கலமாகி, சில ஒழுங்கைகளுக்கு மட்டும் எல்லையாகி, கிராமங்களுக்குள் மட்டும் நிர்க்கதியாகி, ஊர் அடங்கு உத்தரவில் இருந்த நாம் பல புதிய அனுபவங்களை பெற்றிருப்போம். கோவிட் 19 எங்களுக்கு பல புதிய விடயங்களைக் கற்றுத்தந்திருக்கும். நாம் கற்றுக்கொண்டும் இருப்போம்.

இக்காலத்தில் நாம் எம்மில் வளர்த்துக்கொண்ட நல்ல பயிற்சிகளை, பயனுள்ள எண்ணங்களை எம் ஒவ்வொருவரின் வாழ்க்கை புத்தகத்தில் சேர்த்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். புதியதொரு அத்தியாயத்தை படைக்க வேண்டிய கட்டயத்திற்கு நாம் உள்ளாகிவிட்டோம்.

நாம் ஒரு இயல்பான வாழ்வுக்கு பழகியிருப்போம்
இருக்கும் உணவுகளை, கிடைக்கும் உணவுகளை போதும் என்று ஏற்றுக்கொண்டிருப்போம்
சமைக்க ஒரு பொருள் இல்லாதிருந்தால் அது இல்லையே என்று எண்ணிக்கொண்டிருக்காமல் இருப்பதை போதுமாக்கி சமைத்து இருப்போம்
ஒருவர் மற்றவரின் மனதை புரிய கற்றிருப்போம் 
ஒரு குடும்பம் இன்னொரு குடும்பத்தை உள்ளத்தால் உணரவும் புரியவும் கற்றிருப்போம்
சேர்ந்து செயற்படவும் பகிர்ந்துகொள்ளவும் பழகியிருப்போம்
இருப்பதையும் கிடைப்பததையும் போதுமாக்கிக்கொள்ள மனதைப் பழக்கியிருப்போம்
தேவையோடு இருந்த பலர் எமக்குத் தேவைப்படுவது போன்று மற்றவர்களுக்கும் தேவைகள் உண்டு என்பதைப் புரிந்திருப்போம்
இன்றுபோல் இனிவரும் நாட்களில் மற்றவர்களோடு நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று புரிந்திருப்போம் 
மற்றவர்களுக்காக வாழவேண்டும் என்ற தன்மை அகன்று எளிமையாக வாழ்வது வளமானது என்பதை உணர்ந்திருப்போம்
ஒரு நாளில் 3000 - 4000 ரூபாய்கள் என செலவு செய்தவர்கள் வெறும் 1000 ரூபாய்க்குள் ஒரு நாளை சமாளித்துக்கொள்ள முடியும் என்று உணந்திருப்போம்
சாதாரண நோய்களை தாங்கிக் கொள்ளவும், கைமருந்துகளை கொண்டு சிறிய நேய்களை குணப்படுத்திக் கொள்ளவும் பழகியிருப்போம் 
வாழ்க்கையில் சவால்கள், சங்கடங்கள் வரும் என்பதையும் அவற்றுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டும் என்பதையும் முடியுமான விதத்தில் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்திருப்போம் 
எதிர்காலத்தில் இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் எப்படி முகம்கொடுக்க வேண்டும் என்பதையும் முடியுமான அளவு கற்றிருப்போம்
முன்பு தவறிப்போன பல விடயங்களை எங்கள் வாழ்வில் சேர்த்துக்கொண்டிருப்போம் 

இவையும் இவை போன்ற பல அழகான மாற்றங்கள் எங்களில் ஏற்பட்டிருக்கலாம். இந்த மாற்றங்களை எந்த மனிதர்களும் எங்களில் உருவாக்கவில்லை. உறத்த குரலில் பேசுகின்ற பேச்சாளர்களாலும் எழுத்தாளர்களாலும் புத்திமதிகளாலும் ஆலோசனைகளாலும் செய்ய முடியாததை எல்லாம் கொரோனா என்கின்ற கிருமியின் அழுத்தம் எங்கள் உணர்வில் உள்நுழைந்து ஆரம்பத்தில் எங்களை கொஞ்சம் உசுப்பி உழுக்கி எடுத்தாலும் பிறகு நல்ல மாற்றங்களை நோக்கி எங்களை நகர வைத்திருக்கிறது.

ஒரு ஊந்தல் எங்கள் வாழ்க்கை புத்தகத்தில் அழகானவற்றை எழுத எமக்கு வாய்ப்புத் தந்திருக்கின்றது.

இந்த வாய்ப்பிலிருந்து பல நல்ல பாடங்களை கற்றுக்கொண்டோம். மனிதர்களாகிய நாங்களே நல்ல பல வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டதால் இவற்றை நீடித்து நிலைக்கச் செய்து ஒரு எளிமையான அழகான வாழ்க்கையை இந்த மண்ணில் நிலைபெறச்செய்வோம்.

முட்டையை உடைத்துக்கொண்டு அழகான குஞ்சு வெளியே வருவது போன்று எங்களது உணர்வுகளிலிருந்து அழகான நடத்தைகள் வெளியே வந்திருக்கின்றன. எம்மை மாற்றிக்கொள்ள எமக்கு முடியும். எமக்குள் நல்ல சிந்தனைகளும் நல்ல நடத்தைகளும் உருவாக நாமே காரணமாகியும் இருக்கிறோம். மாற்றம் என்பது எம் சிந்தனையில் இருந்து வந்திருக்கிறது என்பதை உறுதியாகவே புரிந்துகொள்வோம்.
……………
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.