கொரோனா பரவலுக்கு மத்தியில், மிக இறுக்கமான சுகாதார வழிகாட்டல்களின் கீழ் புனித ஹஜ் யாத்திரை இன்று ஆரம்பமாகியுள்ளது.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் யாத்திரை, (ஹிஜ்ரி 1441) இஸ்லாமிய மாதமான, ஹஜ் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

இம்முறை சவுதி அரேபியாவில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 10 ஆயிரம் ஹஜ் யாத்திரிகர்களின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமானது.

சவுதி அரேபியாவின் மக்கா நகரில் கூடும் யாத்திரிகர்கள், முற்று முழுதான சுகாதார வழிகாட்டல் மற்றும் சமூக இடைவெளியைப் பேணி கடமைகளை ஆரம்பித்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வருடாந்தம் பல்வேறு நாடுகளிலிலுமிருந்து சுமார் 2 மில்லியன் (20 இலட்சம்) யாத்திரிகர்களுடன் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கருத்திற் கொண்டு இம்முறை பத்தாயிரம் பேருடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் சுமார் 270,000 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அதில் சுமார் 3,000 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹஜ் யாத்திரையின் முதலாம் நாள், ஹஜ் மாதத்தின் 8ஆம் நாளில் (மக்காவில் இன்று) ஆரம்பமாகின்றது. யாத்திரிகர்கள் பிரத்தியேகமான இஹ்ராம் எனும் உடை அணிந்து, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தனது ஹஜ் கடமையை ஆரம்பிக்கின்றனர்.

ஹஜ்ஜின் பிரதான கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜின் இரண்டாம் நாளான ஹஜ் மாதத்தின் 9ஆம் நாளில் யாத்திரிகர்கள் அரபா எனும் பாரிய மைதானத்தில் தரிப்பர்.

ஹஜ்ஜின் (பர்ளு )கடமைகள் -4

* இஹ்ராம் தரித்தல்
* அரஃபாவில் தங்குதல்
* தவாப் செய்தல்
* ஸயி செய்தல்

ஹஜ்ஜின் (வாஜிப்) கடமைகள்

* மீகாத்தில் இஹ்ராம் கட்டுதல்
* அரபாவில் சூரியன் மறையும் வரை தங்குதல்
* முஸ்தலிபாவில் தங்குதல்
* பிறை 11, 12, 13 இரவுகளில் மினாவில் தங்குதல்
* அகபா ஜம்ராத் தூண்களில் வரிசைப்படி கல் எறிதல்
* தலைமுடி மழித்தல் அல்லது குறைத்தல்
* விடை பெறும் தவாப் அல் -வதாஉ செய்தல்

ஹஜ்ஜின் ஸுன்னத்துகள் (கட்டாயமல்ல)

* இஹ்ராம் தரிக்கும் பொழுது குளித்தல்
* ஆண்கள் வெள்ளை ஆடைகளில்; இஹ்ராம் தரித்தல்
* தர்பியா சொல்லுதல்
* அரஃபா நாளின் இரவு (பிறை 8 மாலையில்) மினாவில் தங்குதல்
* மக்கா நகருக்குச் சென்றவுடன் செய்யும் தவாபில் ஆண்கள் மட்டும் முதல் மூன்று சுற்றுகளில் சற்று வேகமாக நடக்குதல்.
* வலது புஜம் திறந்த நிலையில் மேலங்கி அணிதல்
* ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுதல்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.