இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுவடைந்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பட்டலந்த, மாகோலவில் அமைந்துள்ள பாதுகாப்புப் பயிற்சிக் கல்லூரியில் (Defense Services Command and Staff College)  இன்று நடைபெற்ற பாகிஸ்தான் இராணுவக் கல்லூரியின் (Pakistan Command and Staff College) நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

'கடினமான காலங்களில் பாகிஸ்தான் அளித்த ஆதரவை இலங்கையர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

ஆதாரமற்ற மனித உரிமை குற்றச்சாட்டுகள் நாட்டுக்கு எதிராக சுமத்தப்பட்டபோது பாகிஸ்தான் இலங்கைக்கு ஆதரவாக நின்றது.

அடுத்த ஆண்டு முதல் இலங்கையில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்க திட்டமிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதார, கலாச்சார மற்றும் கல்வி உறவுகளில் கட்டமைக்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையின் மூலம் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு விடயங்களில் இராஜதந்திர ஒத்துழைப்பு மேலும் வலிமையடைந்து வருகின்றது.

புலிகளுக்கு எதிரான பயங்கரவாத யுத்தத்தில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான தசாப்தத்தின் நீண்ட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர நாடு போராடிய வேளையிலும், ஆதாரமற்ற மனித உரிமைகள் குற்றச்சாட்டுகள் நாட்டுக்கு எதிராக சுமத்தப்பட்டபோதும் ​​பாகிஸ்தான் வழங்கிய ஆதரவை இலங்கை ஒருபோதும் மறக்காது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.