"அப்பச்சி மழோ" என்று பலராலும் அறியப்படும் முன்னாள் கடற்றொழில் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா அவர்கள் எமது சியன ஊடக வட்டத்திற்கு வழங்கிய நேர்காணல்

கேள்வி : ஊவா - மொனறாகலை மாவட்டத்தை சேர்ந்த நீங்கள் இம்முறை பொதுத் தேர்தலுக்காக கம்பஹா மாவட்டத்திற்கு வந்த நோக்கம் என்ன?

பதில் : உண்மையில் நான் அரசியல் செய்தது பதுளை மற்றும் மொனறாகலை மாவட்டங்களில் தான். ஆனால், நான் எனது சொந்த ஊர் கம்பஹா மாவட்டத்தில் இருக்கும் கடான. நான் முன்னாள் அமைச்சர் விஜேபால மெண்டிஸ் குடும்பத்தை சேர்ந்தவன்.  நான் வளர்ந்தது எனது பெரிய அக்காவிடம். அவர் சீதுவை - முகலன்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர். எனது பரம்பரையினர் 1948 முதல் பாராளுமன்றத்தினை அலங்கரித்து வந்திருக்கின்றனர். 1948 இல் இஸட். த சொய்ஸா நீர்கொழும்பு தொகுதி உறுப்பிராக இருந்தார். அதன் பிறகு மைக்கல் சிறிவர்தன 1970களில் தொழிற்துறை அமைச்சராக இருந்தார். அவர் மினுவாங்கொட தொகுதியை சேர்ந்தவர். அதனைத் தொடர்ந்து பாராளுமன்றில் இருந்த கடானையை சேர்ந்த கே.சீ.சில்வா எனது உறவினர். அதே கடானை தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் விஜேபால மெண்டிஸ் எனது மைத்துனர். அதே போன்று தற்போது மொட்டு சின்னத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கும் மேல் மாகண சபை உறுப்பினர் லலந்த என்னுடை மகன் முறை. மேலும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளரான ஆனந்த ஹரிஸ்சந்திரவும் எனது உறவினர். 

கம்பஹா மாவட்டம் எனது ஊர். புதியவர்களுக்கு தெரியாவிட்டாலும் எனது ஊர் இதுதான். எனது மனைவியின் ஊர்தான் மொனறாகலை. எனக்கு மொனராகலையிலும் வெல்லலாம். இரத்தினபுரியிலும் வெல்லலாம். இரத்தினபுரியில் இருக்கும் 47 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களில் 45 பேர் கையொப்பமிட்டு சிறிகொத்தையில் வைத்து என்னை கேட்டார்கள். எனக்கு தென் மாகாணத்திலும் போட்டியிடலாம். குருநாகலிலும் போட்டியிடலாம், அங்கேயும் உறவினர்கள் இருக்கிறார்கள். ராஜபக்சர்களுக்கு மட்டுமா வெவ்வேறு மாவட்டங்களில் போட்டியிடலாம்? பஷில் கம்பஹாவில் போட்டியிடும் போது, உங்களது ஊர் எங்கே என்று யாராவது கேட்டீர்களா? மஹிந்த குருநாகலில் போட்டியிடும் போதும் கேட்டீர்களா? 

நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் எந்தவொரு மாவட்டத்திலும் போட்டியிடுவதற்கு உரிமையிருக்கிறது. எனக்கு யாழ்ப்பாணத்திலும் போட்டியிடலாம். மைத்திரிபால சிறிசேனவும் கம்பஹாவை சேர்ந்தவர். அவர் பொலன்னறுவையில் போட்டியிடுகிறார். ஒருவர் எங்கு போட்டியிடுகிறார் என்பது முக்கியமல்ல. அவரது அரசியல் ஆற்றலே முக்கியம். அதனை எதிர்ப்பது பிரதேசவாதமாகும். நான் எப்போதும் பிரதேசவாதத்திற்கு எதிரானவன். பிரதேசவாதத்தினை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள். அதனை நடைமுறைப்படுத்தியது எமது அரசியல்வாதிகளே. சிங்கள, தமிழ், முஸ்லிம்களுக்கு வெவ்வேறான கட்சிகளை அறிமுகப்படுத்தியது எமது அரசியல்வாதிகள். நாம் அனைவரும் மனிதர்கள்.  எமது பிரதான கலாச்சாரம் சிங்கள கலாச்சாரம். உப கலாச்சாரம் இந்து கலாச்சாரம். எமது மன்னரொருவர் முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்ததாக மஹிந்த ராஜபச்ஷ கூறினார். அவ்வாறு முடித்தது பிழையில்லை. அந்நிய நாட்டு ஆக்கிரமிப்புக்களை தடுப்பதற்காக அவ்வாறு மன்னர்கள் செய்தார்கள். நான் சகலவிதமான இனவாதங்களுக்கும் எதிரானவன். 

கேள்வி : கம்பஹாவில் உங்களது தேர்தல் பிரச்சாரம் எவ்வாறு நடைபெறுகிறது?

பதில் : எனது பிரச்சாரம் இங்கு சிறந்த முறையில் நடைபெறுகிறது. மொனராகலை என்பது குறைந்த வாக்காளர்களைக் கொண்ட இடம். அங்கு எனது குரல் குறைவானவர்களுக்கே சென்றடையும். ராஜபக்சர்களுக்கு பதிலடி கொடுக்க கம்பஹா போன்று பாரிய வாக்காளர் எண்ணிக்கையினைக் கொண்ட ஒரு இடம் தேவை. அதற்காகவே கம்பஹாவுக்கு வந்தேன். 

கேள்வி : மாவட்டத்திலிருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள்? 

பதில் : ஊவா மாகாணத்தில் நான் முதலமைச்சராகுவதற்கு மூன்று ஆசனங்கள் போதாமல் இருந்தது. அந்த நேரம் தொண்டமான் மஹிந்தவுடன் கோபத்தில் இருந்தார். ஆனால் லோகநாதனும், விஜயகுமாரும் எனக்கு ஆதரவளித்தனர். அந்த நேரம் அரவிந்த குமாரை கண்டதும் இல்லை. ஆனால் அவரும் எனக்கு ஆதரவு தந்தார். அத்துடன் வெலிமடையை சேர்ந்த அமீர், தியதலாவையை சேர்ந்த மதார் ஆகிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் எனக்கு ஆதரவளித்தனர். அந்த நேரம் நான் சுதந்திரக் கட்சி. ஆனால் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த உறுப்பினர் வேலாயுதம் கூட எனக்கு ஆதரவளித்தார். இதற்கான காரணம், நான் என்றும் இன ரீதியான பாகுபாடு காட்டியது கிடையாது. பல விகாரைகள், கோவில்கள், பள்ளிவாசல்களுக்கு உதவியிருக்கிறேன். சகல சமயங்களை சேர்ந்தவர்களதும் ஆன்மீக கல்விக்காக உதவியிருக்கிறேன். காரணம் சகலரும் ஆன்மீக கல்வியை கட்டாயம் கற்க வேண்டும்.

கேள்வி : நீங்கள் வெற்றி பெற்ற பின்பு முஸ்லிம் மக்களுக்கு செய்வதற்கென ஏதாவது வேலைத்திட்டங்களை வகுத்திருக்கிறீர்களா?

பதில் : நான் இன, மத பேதமில்லாமல் அனைவருக்கும் சேவையாற்றுவேன். உண்மை என்னவென்றால் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் குறுகிய நிலப்பரப்புகளில் செறிந்து வாழ்கிறார்கள். ஊவா மாகாணத்தில் கல்வி, விவசாயம், சுகாதாரம், நீர்ப்பாசனம் போன்ற பல துறைகளை முன்னேற்றியிருக்கிறோம். 200 ஏரிகளை நிர்மாணிக்கும் திட்டத்தில் 100 இனை பூரணப்படுத்தினோம். எனது நோக்கமே பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையுடன் செயற்பட்டு நாட்டினை முன்னேற்ற வேண்டும். இதனாலேயே இனரீதியிலான வன்முறைகளை தடுக்கலாம். இன குரோதங்களை ஏற்படுத்தும் அரசியல்வாதிகளை சிறையிலடைக்க வேண்டும். ரூ.2000 மில்லியன் களப்பு அபிவிருத்திக்காக என்னுடைய அமைச்சுப் பதவிக்காலத்தில் ஒதுக்கினேன். கடற்றொழில் அமைச்சராக இருந்த அக்காலத்தில் தமிழ் மீனவர்கள் உட்பட அனைவருக்கும் பல்வேறு சேவைகளை செய்தேன். 70 ரூபாவிற்கு மண்ணெண்ணய் வழங்க நான் தான் போராடினேன். 

முஸ்லிம்கள் என்றும் நாட்டை பிரித்துக் கேட்கவில்லை. தீவிரவாதம் என்று வரும் போது எந்த சமூகத்தை சேர்ந்த தீவிரவாதமாக இருந்தாலும் அதனை எதிர்ப்பேன். தீவிரவாதத்திற்கு இனமோ மதமோ கிடையாது. அனைவருக்குமான உரிமை நாட்டில் இருக்க வேண்டும். 

கேள்வி : உங்களுக்கு கம்பஹாவில் வெல்ல முடியுமா?

பதில் : அதிக விருப்பு வாக்குகளுடன் வெல்ல முடியும். என்னிடம் இருக்கும் அரசியல் திட்டங்கள், அனுபவம், இதுவரை ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகாமை போன்றவை என்னை வெல்ல வைக்கும். "அப்பச்சி மழோ" என்றால் எல்லோருக்கும் என்னை தெரியும். "அப்பச்சி மழோ" இற்கு வாக்களிக்குமாறு அனைத்து இனத்தவர்களும் கூறி வருகிறார்கள். 

கேள்வி : இம்முறை சமகி ஜன பலவேகய கட்சிக்கு கம்பஹா மாவட்டத்தினை வெல்ல முடியுமா?

பதில் : சரியாக பிரச்சாரத்தை கொண்டு செல்வதன் மூலம் கட்டாயம் பத்து ஆசனங்களுடன் மாவட்டத்தை வெல்வோம். அரசாங்கம் பலவீனமாக இருக்கும் இந்த நேரத்தில் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டால் எதற்கு எதிர்க்கட்சி?

கேள்வி : ஐக்கிய தேசிய கட்சி கம்பஹாவில் எத்தனை ஆசனங்களை வெல்லும்?

பதில் : தற்போதைய நிலை தொடர்ந்தால் ஒரு ஆசனம் கூட கிடைக்காது. ஆனால் எதிர்வரும் நாட்களில் அவர்கள் செய்கின்ற பிரச்சாரத்தை பொறுத்து மாற்றங்கள் ஏற்படலாம்.  

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.