தொல்லியல் மரபுகளை முகாமைப்படுத்தும் ஜனாதிபதி செயலணி தொடர்பில் கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து தமது எதிர்ப்பை வௌிப்படுத்தியுள்ளன.

விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக உருவாக்கப்பட்ட குறித்த செயலணி இனப் பிரதிபலிப்பில் ஓரினத்தன்மையைக் கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கிழக்கு மாகாணம் கலாசாரம், இனம், மதம் என்ற ரீதியில் பன்முகத்தன்மை கொண்டது என்பதுடன், அங்கு தமிழ் மொழியே முதல் நிலை மொழி என்பதை வலியுறுத்துவதாகவும் குறித்த அமைப்புகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இன முரண்பாடுகளினால் பிளவுகள் உள்ள நாட்டில் மேலும் விரிசலை ஏற்படுத்த தாம் முனையவில்லை எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வரலாற்றுப் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுஇ அவை எதிர்கால சந்ததியையும் அடையவேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், செயலணியானது மாகாணத்தினுடைய பன்முகத்தன்மையை பிரதிபலிக்கவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், அவ்வாறானதொரு செயலணியை உருவாக்கியதன் உள்நோக்கம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

இச்செயலணியை கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் அமைத்திருப்பது கிழக்கு மாகாணத்தின் பாரம்பரியம் அபாய கட்டத்தில் உள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிப்பதாக குறித்த சிவில் அமைப்புகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலணிக்கு தனியார் துறை ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவரினதும் நியமனம் கிழக்குவாழ் மக்கள் மத்தியில் ஆதங்கங்களை தோற்றுவித்துள்ளதுடன், இதன் மறைமுக நிகழ்ச்சி நிரல் பற்றிய ஐயப்பாட்டையும் தோற்றுவிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயலணி குறித்த தமது கண்டனத்தை வௌியிட்டுள்ள கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள், சில பரிந்துரைகளையும் முன்​வைத்துள்ளன.

சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் முன்மாதிரியாக விளங்கும் கிழக்கு மாகாணத்தில் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்காக இந்த செயலணியை கலைக்க வேண்டும் என சிவில் சமூக அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.

இந்த செயலணியின் செயற்பாடுகளை மாகாண சபைக்கு ஒப்படைத்து தொல்லியலுக்கென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களை கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு பல்கலைக்கழகத்திலுமுள்ள துறைசார் நிபுணர்களின் உதவியுடன் பாதுகாத்து பராமரிப்பது அவர்களின் மற்றுமொரு பரிந்துரையாகும்.

கிழக்கு மாகாண தொல்லியல், கலாசார மரபுகளையும் மதித்து செயற்படும் பொறிமுறையை உருவாக்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்புகள் பரிந்துரைத்துள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.