வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நம்புகின்றோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேதாச தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிவரும் வேலுகுமாரின் வெற்றியையும் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் சஜித் கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதத்தில் நாவலப்பிட்டியவில் இன்று (24) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சஜித் மேலும் கூறியதாவது,

" பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுக்கப்படும் என ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த தொகை கிடைத்துவிட்டதா? இல்லை. இவ்வாறுதான் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றது. எமது ஆட்சியின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

அதேபோல் மக்களுக்கு 20 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கான பொருளாதாரத் திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்துக்குள் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படும். உலக சந்தையின் எரிபொருட்களின் விலைகள் குறைந்தும், இந்த அரசாங்கம் அதன் நன்மையை நாட்டு மக்களுக்கு வழங்கவில்லை.

சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவிலும் கைவைத்துள்ள இந்த அரசாங்கம், மின்கட்டணம் தொடர்பிலும் போலியான அறிவிப்புகளை விடுத்து வருகின்றது. மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணம் இல்லாது செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால், அறவிடப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின்கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு எமது ஆட்சியின் கீழ் அந்த கொடுப்பனவு மீள வழங்கப்படும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

நாட்டு மக்களை பலவழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கம் அடுத்துவரும் நாட்களில் அரச ஊழியர்களின் சம்பளத்தைக் கூட குறைக்கலாம். மேலும் சிலரை வீட்டுக்கு அனுப்பலாம். இவை தடுக்கப்படவேண்டும். அப்படியானால் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சி மலர வேண்டும்.

தொலைபேசி வெற்றிபெறும். கண்டி மாவட்டத்திலும் வெற்றி உறுதி. நான் பிரதமராவேன். அதன் பின்னர் அப்பகுதிகளுக்கு வருவேன்." - என்றார்.

-கிரிஷாந்தன்-

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.