அல் முஹ்ஸின் விஞ்ஞான கல்லூரி மற்றும் Gampaha Progressive Society (GPS) ஆகியவற்றின் ஸ்தாபக தலைவரும் பிரபல சமூக சேவையாளருமான மள்வானை இஸ்மாயில் ஹாஜியார் எமது சியன ஊடக வட்டத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலின் இரண்டாவது பகுதி. 

முதலாவது பகுதியை இங்கு பார்க்கலாம் - http://www.siyanenews.com/2020/07/blog-post_622.html?m=1

"கோத்தாபய ராஜபக்ச ஜனாதியாக தெரிவானதனை தொடர்ந்து அநுராதபுரத்தில் நடைபெற்ற சத்தியப் பிரமாண நிகழ்வில் தான் எதிர்பார்த்தளவு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்றே ஜனாதிபதி கூறினார். ஆனால் நம்மவர்கள் ஜனாதிபதி, தனக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்று கூறியதாக சொல்லி வருகின்றனர். அதனை ஜனாதிபதிக்கு சேறுபூசுவதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

 ஆனால் அவர் கூறியதில் ஆழமான அர்த்தம் இருக்கிறது. அதாவது, முஸ்லிம்கள் அதிகமாக வாக்களிப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள். ஆனால் அவ்வாறு கிடைக்கவில்லை என்பது தான். அவ்வாறு கூறுவதே ஒரு சந்தோசமான, பெரிய செய்தியாகும்.

ஒரு இனவாதமுள்ள ஒருவராக இருந்தால் ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்க மாட்டார். இந்த தேர்தலில் கூட முஸ்லிம்கள் அவர்களுடன் இணைவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் சிறுபான்மை மக்களிடமிருந்து தூரமாகியிருந்தால், அவர்களுக்குத்தான் சிரமமாக இருந்திருக்கும். தனி ஒரு இனம் மட்டும் நாட்டை ஆட்சி செய்வது போன்று இருக்கும். நாமும் அவர்களோடு சேர்ந்து போக வேண்டும்.

நாங்கள் வடக்கில் துன்பங்களை அனுபவிக்கும் போதும் சிங்கள மக்களுடன் சேர்ந்தே இருந்தோம். நாட்டின் புலனாய்வுப் பிரிவை முஸ்லிம்களிடம் தான் கொடுத்திருந்தார்கள். அந்தளவு நம்பிக்கையானவர்களாக முஸ்லிம்கள் இருந்தனர்.

அவர்கள் எம்மை தாக்குகிறார்கள், ஜனாஸாக்களை எரிக்கிறார்கள் என்று தூரமாகுவதனை விட அவர்களுடன் நம்பிக்கை வைத்தே இணைவதே நல்லது. அவர்கள் எமக்கான சட்டங்களை இல்லாமாக்குவதாக கூறுவது வெறும் மேடை பேச்சு தான். அதனை வைத்து எம்மவர்கள் அரசியல் செய்கிறார்கள். நீங்கள் பயப்படும் அளவுக்கு இலகுவாக அவர்களால் சட்டங்களை மாற்ற முடியாது.

மொட்டுக் கட்சியில் உள்ள இனவாத கருத்துள்ளவர்கள் அவற்றை கூறினாலேயே அவர்களுக்கு வாக்கு கிடைக்கும். அதற்காக நாம் அதனை நம்பிக்கொண்டு இருக்க தேவையில்லை. நாமும் இந்த நாட்டின் மக்கள். அந்த எண்ணம் எம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது. இது எம் நாடு என்று எமது அடி மனதில் இன்னும் வரவில்லை.

அவ்வாறு வரும் போது எமது உரிமையில் எதுவும் பழுதடையாது. எம்மை விட மூன்று சதவீதம் குறைவாகவுள்ள கிறிஸ்தவர்களின் எந்த உரிமை இந்த நாட்டில் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் உரிமைக்காரர்களான நாங்கள் எந்தவொரு உரிமையினையும் பறிக்க விட மாட்டோம். அதற்காக நாங்கள் அவர்களுக்கு வாக்குகளை வழங்கி விட்டு பேசுவோம்.

இனவாதம் பேசும் ரத்ன தேரர் இம்முறை பாராளுமன்றத்திற்கு வருவார் என்று நினைக்கிறீர்களா? பெரும்பான்மை மக்கள் கூட அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு தயார் இல்லை. நாம் ஆளும் கட்சியுடன் முடியுமான வரை இணைந்து செல்வோம். எதிர்கால சந்ததியினருக்கு வேலை செய்யக்கூடிய சூழலை உருவாக்குவோம். நாம் சேர்ந்து செல்வோம். ஜே.ஆர். கொண்டு வந்த தேர்தல் முறையினாலேயே முஸ்லிம்கள் பிரிந்தோம். எதிர்காலத்தில் அது சரி செய்யப்படும்.

முஸ்லிம்களின் 95 வீதம் வாக்குகளை பெற்ற சஜித் ஜனாஸா எரிப்பு தொடர்பில் ஒரு வார்த்தையாவது பேசினாரா? அவர் பேசவில்லையே? இலங்கையின் நான்காவது பிரஜை என்ற அந்தஸ்தில் இருந்தார். அவர் எதிர்பார்த்தது, நிலைமை தொடர வேண்டும். தமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே.

முஸ்லிம்கள் எல்லோரும் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து, எமது விடயங்களை உரிமையோடு பேசும் சந்தர்ப்பத்தினை தாருங்கள் என்று கேட்கிறோம். 
Blogger இயக்குவது.