இம்முறை தேர்தலில் மொட்டு கட்சியை அதிக வாக்குகள் வித்தியாசத்துடன் வெற்றியடையச் செய்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் நடைபெற்ற பல்வேறு மக்கள் சந்திப்புகளில் நேற்று (02) பிற்பகல் கலந்துக் கொண்டு அங்கு கருத்து தெரிவித்த பிரதமர், புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கில் நடவடிக்கை எடுப்பதற்கு இன, மத பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டிய காலம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இம்முறை பொதுத் தேர்தலுக்கான பிரசாரங்களை நிறைவுசெய்யும் இறுதி தினமான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெட்டிய, மித்தெனிய, வலஸ்முல்லை ஆகிய பிரதேசங்களில் இந்த மக்கள் சந்திப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்படுவதற்கு விசுவாசமான பாராளுமன்றம் ஒன்றின் அவசியம் தற்போது காணப்படுகிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்ற காரணத்தினால் உலகளாவிய ரீதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட்-19 தொற்றை வெற்றிகரமாக இல்லாதொழிப்பதற்கு இலங்கைக்கு சாத்தியமாகியது.

உலகின் பெரும்பாலான தலைவர்கள் திக்கற்றுபோன சந்தர்ப்பத்தில் இந்நாட்டின் இராணுவம் மற்றும் சுகாதார பிரிவினரை ஒன்றிணைத்து கொவிட்-19 தொற்றை ஒழிப்பதற்கு வெற்றிகரமான தீர்மானங்களை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முடிந்தமை பாராட்டத்தக்கதுடன், அதற்கு பொதுமக்கள் வழங்கிய ஒத்துழைப்பை நன்றியுடன் ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் நாட்டை விற்பனை செய்யும் கொள்கையுடன் செயற்படுவதாக சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய நம்மில் சிலரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை கவலைக்குரிய விடயமாகும் என குறிப்பிட்டார்.

நாட்டின் வளங்களை விற்பனை செய்வது மற்றும் அரசியல் பழிவாங்கல் தவிர நாட்டிற்கு, மாகாணத்திற்கு, கிராமத்திற்கு எந்தவொரு வேலையும் செய்வதில் நல்லாட்சி அரசாங்கம் தோல்வியடைந்தது. அன்று கலாச்சார நிதியத்தின் நிதியை பெரும்பாலும் பாலங்கள், கால்வாய்கள் நிர்மாணிப்பதற்கு என முறையற்ற விதத்தில் பாவித்தமை தொடர்பில் இதுவரையில் அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Blogger இயக்குவது.