(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அச்சமடைந்து மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வரமாட்டார்கள் என்று நினைத்தவர்கள் பலத்த ஏமாற்றமடைந்திருக்கின்றார்கள். 

அவர்களின் எண்ணத்திற்கு மாறாகப் பெருமளவானோர் வாக்களித்திருப்பதன் ஊடாக ஜனநாயகம் வெற்றியடைந்திருப்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் ஐக்கிய மக்கள் சக்திக்காகத் தமது வாக்குகளைப் பயன்படுத்தியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொதுத் தேர்தல் வேட்பாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக இன்று புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்களித்துவிட்டு, ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது நாட்டு மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதந்து தமது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

ஜனநாயகம் வெற்றியடைந்திருப்பதன் வெளிப்பாடாகவே இதனைக் கருத வேண்டும்.

கொவிட்-19 கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வரமாட்டார்கள் என்றும் தமது வீடுகளுக்குள்ளேயே இருப்பார்கள் என்று நினைத்தவர்களுக்கு இது தோல்வியாகும்.

ஆனால் ஜனநாயகமே வெற்றியடைய வேண்டும் என்று எதிர்பார்த்த எம்மைப் போன்றவர்கள் மக்களுடன் இணைந்து அதனை வெற்றி கொண்டிருக்கின்றோம்.
அதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகளும் மிகவும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் தமது பணிகளை முன்னெடுத்ததுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

எது எவ்வாறெனினும் கொழும்பு உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் தற்போது வரை பெறப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி ஐக்கிய மக்கள் சக்தி முன்நிலையில் உள்ளது.

ஆகவே மக்கள் பெருமளவில் வந்து வாக்களித்துள்ளமையால் ஜனநாயகம் வெற்றியடைந்துள்ளமை மகிழ்ச்சியைத்தரும் அதேவேளை, மறுபுறம் மக்களில் பெருமளவானோர் எமது தரப்பிற்காக வாக்குகளைப் பயன்படுத்தியிருக்கின்றமையும் திருப்தியளிக்கின்றது என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.