"மத்தியகுழு, தேசியசபை என்பவற்றையெல்லாம்விடவும் மக்கள் சக்திக்கே வலிமை அதிகம். அந்தவகையில் மக்கள் என் பக்கமே நிற்கின்றார்கள். கடந்த பொதுத்தேர்தலின்போதும் இது உறுதியானது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவரான அமரர் சந்திரசேகரனின் மகள் சட்டத்தரணி அனுசா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கட்சியிலிருந்து அனுசா சந்திரசேகரனை நீக்கும் வகையில் மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை இன்று எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

” மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை எடுத்துள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டதும் எனது அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்துவேன்.

யார், எப்படியான தீர்மானங்களை எடுத்தாலும் அரசியலில் அங்கீகாரம் வழங்கும் ‘சுப்ரீம் பவர்’ என்பது மக்களிடமே இருக்கின்றது. இதன்படி மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்கள் எனது அரசியல் பயணத்தை அங்கீகரித்துள்ளனர்.இதன்காரணமாகவே எனக்கு 17 ஆயிரம் வாக்குகள் வழங்கப்பட்டன. மலையக இளைஞர், யுவதிகளும் புதிய அரசியல் தலைமைத்துவத்தை வரவேற்றுள்ளனர்.

எனவே, மக்களின் பேராதரவுடன் முன்நோக்கி பயணிப்பேன். தர்மத்துக்கும், அதர்மத்துக்குமிடையிலான போட்டியில் தர்மமே வெல்லும் என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.” – என்றார் அனுசா சந்திரசேகரன்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.