மாகாண சபைகளை இல்லாமற் செய்வதற்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ள சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அம்முறைமையில், ஏதாவது பிரச்சினைகள் இருப்பின், அதனை திருத்தி, மாகாண சபை முறைமை, நாட்டுக்குள் பேணப்படவேண்டும் என்றார்.

மாகாண சபை முறைமை நீக்குவதற்கான முயற்சியை,  முன்னாள் முதலமைச்சர் என்றவகையில், நானே முதலில் எதிர்ப்பேன் எனத் தெரிவித்த அவர், மாகாண சபை முறைமை அமுலில் இருக்கவேண்டும் என்றார்.

கொக்கல ஏற்றுமதி வலயத்தில் மருந்து உற்பத்தி தொழிற்சாலையொன்றை அமைப்பதற்காக, அடிக்கல் நாட்டும் நிகழ்வு, அண்மையில் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும்  போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

13ஆவது திருத்தம் ஊடாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமை​யானது இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்டது எனத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வாக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

“என்றாலும் நிர்வாக அதிகாரத்தை பிரிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை நீக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டிலே​யே நான் இருக்கின்றேன்” என்றார்.

“மாகாண சபைகளை  “வௌ்ளை யானை” என குற்றம் சுமத்தினாலும் வேலைச் செய்யாதவர்களை முதலமைச்சர் ஆசனங்களில் அமரவைத்தமையால், வேலைச் செய்யக்கூடிய திறமையானவர்களுக்கும் மாகாண சபைகள் ஊடாக வேலை செய்ய முடியாமல் போனது”  என்றார்.

மாகாண சபைகளின் ஊடாக, சம்பளம் வழங்கப்படுகின்றமை கூடுதலான நிதி விரயமாக காட்டப்படுகின்றது. ஆனால், மாகாண சபைகள் ஒழிக்கப்பட்டாலும் மாகாண சபைகளில் பணிபுரிந்த அந்த அதிகாரிகள், பணியாளர்கள் உட்பட ஊழியர்கள், அரச சேவைக்குள் உள்வாங்கப்படுவர். அப்போது, அதேயளவான செலவையும் அரசாங்கம் ஏற்கவேண்டும் என்றார்.

எனவே, மாகாண சபைகள் என்ற வார்த்தை எவருக்கும் பிடிக்காமல் போகுமாயின், அதனை திருத்துவது பிரச்சினை இல்லையென்றும் அதனை விடுத்து மாகாண சபைகளை நீக்குவது அதற்கான தீர்வு இல்லையெனத் தெரிவித்த அவர், அது தனது தனிப்பட்ட கருத்தாகும் என்றார்.

(தமிழ் மிரர்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.