(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவாகிய கட்சிகளின் தலைவர்களுக்கு முன் வரிசையில் ஆசனம்  ஒதுக்கப்பட்டுள்ளமைக்கு மீண்டும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினர் இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கருத்தில் கொள்ளாது இருப்பது தவறான செயற்பாடு எனவும் குற்றம் சாட்டியது.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின்  பண்டார ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை எழுப்பிய இக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதிலளிக்கையில்,

இது தொடர்பில் நாம் ஆராய்ந்தோம்.பாராளுமன்றத்தில் தற்போது 15 கட்சிகள் உள்ளன.அதன் அடிப்படையில் முன்வரிசை ஆசனங்களை ஒதுக்கப் போனால் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் பின்வரிசைக்கு போக நேரிடும் என்றார்.

அப்போது மீண்டும் எழுந்த நளின் பண்டார எம்.பி. அதனைத்தானே  நாமும் கூறுகின்றோம்.முன்வரிசை ஆசனங்களை கட்சித்தலைவர்கள் என்ற பெயரில் புதியவர்களுக்கு கொடுத்துள்ளதால் சிரேஷ்ட உறுப்பினர்கள் பின்வரிசையில் அமர வேண்டியுள்ளது என்று தானே நாம் உங்களுக்கு அப்போதும் இப்போதும் சொல்கின்றோம் .

எனவே நீங்கள் சரியான தீர்வை வழங்க வேண்டும் எனக்கூறியபோது சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. இதனையடுத்துசிரித்தவாறே என் மீது சிக்கலான பணி  ஒன்றை சுமத்துகின்றீர்கள் .ஆராய்ந்து பார்ப்போம் என சபாநாயகர் பதிலளித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.