ஆசிரியர் உதவியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று கால்வி அமைச்சர் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பட்டப்படிப்பை பூர்த்தி செய்து முறையான பயிற்சி பெற்ற சகல ஆசிரிய உதவியாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தல் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

'மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள தமிழ்ப்பாடசாலைகளில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை நாம் ஏற்கின்றோம், அங்கு உரிய கொள்கைத்திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. முதலில் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களிலேயே மலையக உதவி ஆசிரியர்கள் சேவையாற்றுகின்றனர். இவர்கள் அனைவரும் மாகாண அரச சேவைக்கு உட்பட்டவர்களாவர். மத்திய அரசுடன் தொடர்பில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

தற்போது கடந்தகாலம் தொடர்பில் கதைத்து பயன் இல்லை. இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாம் முயற்சிப்போம். நிதி அமைச்சு, திறைசேரி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன்

மத்திய மாகாணத்தில் உள்ள ஆசிரியர் உதவியாளர்களின் பிரச்சினை தீர்க்கப்படும். இதற்காக நாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் கீழ் நவம்பர் மாதத்தில் இவர்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மலையகத்தில் நாம் கல்வி புரட்சியை எற்படுத்துவோம். முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இடம்பெற்ற தவறுகளுகளுக்கு நாம் பொறுப்பு கூற முடியாது அவற்றை எம்மீது திணிக்க வேண்டாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் 

பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் நேற்று சபையில் சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார்.

மலையக மக்கள் மத்தியில் காணப்படும் ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் குறித்த பிரச்சினை இன்று முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. மலையக கல்வி சமூகம் தமது கல்வியை அங்கீகரிக்குமாறு கோரி வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை வந்துள்ளது.

2014ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய 2015ம் ஆண்டு பெருந்தோட்ட தமிழ்மொழி மூலப்பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்கள் ஆட்சேர்க்கப்பட்டனர். முதல் நியமனத் திகதியில் இருந்து ஐந்து வருடங்களினுள் தாம் நியமனம் பெறும் பாடத்துடன் தொடர்புபட்டு கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆசிரியர் பயிற்சியினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படும் பல்கலைக் கழகங்களில் பட்டம் ஒன்றினை பெறுதல் அல்லது அரசினர் ஆசிரிய கலாசாலைகளில் பயிற்சியினை நிறைவு செய்தல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

இதைக்கேற்ப ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு ஆசிரியர் சேவையில் 3 ஆம் வகுப்பின் தரம் ஒன்றிற்கு உள்ளீர்க்கப்பட்டு சேவையில் உறுதிப்படுத்தப்படுவார் என்றும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது.

பயிற்சி காலத்தில் 6000 ரூபா கொடுப்பனவு வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், 2017ம் ஆண்டு 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. ஆனால் சிலர் தங்களது முயற்சிகளை கைவிடாது டிப்ளோமா படிப்பை தொடர்ந்தனர். கொட்டகலை, கோப்பாய், அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு ஆகிய ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளுக்குக் சென்று தமது டிப்ளோமா பட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் இந்த உள்வாங்கும் நடவடிக்கைகள் முறையாக இடம்பெறுவதாகவும் மத்திய மாகாணத்தில் அவ்வாறு முறையாக இடம் பெறுவது இல்லை எனவும் ஆசிரியர் உதவியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய மாகாணத்தில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்துள்ள 400 ஆசிரியர் உதவியாளர்களின் கோவைகள் பூர்த்தி செய்யப்பட்டு நிரந்தர ஆசிரியர் நியமனத்துக்காக மத்திய மாகாண ஆளுனரிடம் சமர்ப்பித்துள்ள போதும் இதுவரை அவரின் சிபாரிசு கிடைக்கவில்லை என ஆசிரியர் உதவியாளர்கள் முறையிட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.