(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

19 ஆம் திருத்தம் நீக்கப்பட்டு கொண்டுவரப்படும் 20 ஆம் திருத்த சட்டமானது தற்காலிக தீர்வு மட்டுமே. புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் வேளையில் சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் விதத்தில் பாராளுமன்றத்தில் வேலைத்திட்டமொன்று உருவாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சபையில் தெரிவித்தார்.

உருவாக்கப்படும் புதிய அரசியல் அமைப்பில் மாகாண சபை வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானித்தாக வேண்டும். எவ்வாறிருப்பினும் மாகாணங்களுக்கு பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்க வேண்டாம் என்பதே எமது நிலைப்பாடு எனவும் அவர் கூறினார்.

2019ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் 2019ஆம் ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டு செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றின் மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வேளையில் அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், சுயாதீன ஆணைக்குழுக்களை நாம் வெறுக்கவில்லை, ஆனால் சுயாதீன ஆணைக்குழுக்கள் என உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்பட வேண்டும். கடந்த காலங்களில் அவ்வாறு சுயாதீன ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படவில்லை.

முக்கியமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹூல் சுயாதீனமாக செயற்படவில்லை. தன்னை நியமித்த தரப்பினருக்கு விசுவாசத்தை காட்டினார். முன்னர் எமது ஆட்சி காலத்தில் விடுதலைப் புலிகள் புலம்பெயர் அமைப்புகளின் சார்பாக செயற்பட்டார் என்ற காரணத்தினால் நல்லாட்சியில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இணைக்கப்பட்டார். இந்த காலத்தில் அவர் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் இருந்தது. ஆகவே இதுவெல்லாம் எமக்கு பிரச்சினையாக இருந்தது.

ஆகவே தான் நாம் தொடர்ச்சியாக கூறி வந்த ஒன்று என்னவென்றால் சுயாதீன ஆணைக்குழு அரசியல் சார்ந்து இருக்க முடியாது என்பதாகும். எனவேதான் 19 ஆம் திருத்தம் எந்த விதத்திலும் அர்த்தமில்லை, 19 என்பது தனிப்பட்ட ரீதியில் ராஜபக்ஷவினரை அரசியலில் இருந்து தடுக்க எடுக்கப்பட்ட முயற்சியாகும். எனவே 19 ஆம் திருத்தத்தை நீக்க வேண்டும் என்பதே எமது தேர்தல் பிரசாரமாக இருந்தது, 19 ஆம் திருத்தம் நீக்கப்பட்டு 20 ஆம் திருத்தம் கொண்டுவரப்படும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.