இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கு கல்வி பொது தராதர உயர் தரத்தில் குறைந்தபட்சம் 2 C, 1 S சித்தியெய்திருப்பது அடிப்படை தகுதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மருத்து கட்டளை சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சியினால் இவை சபையில் சமர்ப்பிக்கப்பட்டன .

இவற்றில் ஒன்று இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்வதற்கான கல்வித் தகமையாகும். இதுதொடர்பாக இலங்கை பாராளுமன்ற பணிப்பாளர் (தொடர்பாடல்) ஷான் விஜயதுங்க விடுத்துள்ள ஊடக அறிக்கை  மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்கு விதிகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன

மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்கு விதிகள் இன்று (03) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒரு ஒழுங்குவிதியானது நாட்டில் மருத்துவ சபையில் பதிவுசெய்யப்பட்ட வைத்தியராவதற்கு ஆகக்குறைந்தது உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 2 C மற்றும் 1 A பெற்றிருக்க வேண்டும் என்பதாகும். இது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தமது எதிர்ப்பினைத் தெரிவித்ததுடன், ஒவ்வொரு வருடமும் உயிரியல் துறைக்குத் தெரிவாகும் மாணவர்களின் ஆகக் குறைந்த தகுதியில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் உள்ளடக்கக் கோரினார். அத்துடன் இந்த இரண்டு ஒழுங்குவிதிகளையும் நிறைவேற்றாது அமைச்சு சார் ஆலோசனைக் குழுவில் இது பற்றிக் கலந்துரையாடி திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

எனினும் இதற்கு ஆளும் கட்சியினர் இணக்கம் தெரிவிக்காததுடன், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டதற்கு அமைவாக இரண்டு ஒழுங்கு விதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் பின்னர் அநுரகுமார திஸாநாயக்கவின் எதிர்ப்பினையும் குறிப்பிட்டுக் கொண்டு குறித்த இரண்டு ஒழுங்கு விதிகளும் நிறைவேற்றப்பட்டன.

நேற்றைய (03) விவாதத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த இரண்டு ஒழுங்கு விதிகளும் இதற்கு முன்னரே நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், இதன் ஊடாக வைத்தியத் துறையின் தரம் உறுதிப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல எழுப்பிய பிரச்சினையொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் உரிய விதிமுறைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறினார். இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ரஷ்ய பல்கலைக்கழகங்கள் மூன்றினால் வழங்கப்படும் பட்டங்கள் மருத்துவ சபையினால் தடைசெய்வது தொடர்பில் கிரியல்ல அவர்கள் எழுப்பிய பிரச்சினைக்குப் பதிலளித்த அமைச்சர் இது தொடர்பில் விரைவில் ஆராய்ந்து அறிவிப்பதாகவும், தற்காலிகமாக அத்தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

கொவிட் 19 தெற்றுநோய் தொடர்பான பீ.சி.ஆர் பரிசோதனைக்காக 25 பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், நாளொன்றுக்கு 8000 ற்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

விரிவாக ஆராயப்பட்டதன் காரணமாகவே தனிமைப்படுத்தல் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதில் காலதாமதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார். சுகாதார வழிகாட்டல்களை மீறுபவர்களைக் கைதுசெய்யும் அதிகாரம் புதிய திருத்தத்தின் ஊடாகப் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளிலிருந்த 50,000ற்கும் அதிகமான இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் காணப்படும் நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்காலத்திலும் இந்த நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

உலக வங்கியினால் 128 மில்லியன் டொலர் உதவி கிடைத்திருப்பதுடன், இந்தக் கடன்தொகையை 2023 ஆம் ஆண்டுவரை செலவுசெய்ய முடியும் என்பதுடன், இதில் 35 மில்லியன் டொலர் இதுவரையான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுக்க செலவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் 22 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவு செய்வதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் சட்டம் முழு நாட்டுக்கும் பொதுவானதாகும். அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் பொது இடங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பொதுமக்கள் கூடும் பொதுவான இடங்கள் என அர்த்தப்படும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

இலங்கைக்குள் கொரோனா உயிரிழப்புக்கள் குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதுடன், இதனை மேலும் கட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் வேறுபாடுகளின்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

நாட்டில் உள்ள கெவிட் நோயாளர்களில் 60 வீதமானவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படாதிருப்பது பிரச்சினைக்குரியதாகக் காணப்படுகிறது. கம்பஹா மாவட்டத்தில் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடிந்துள்ளது. நாடு முழுவதிலும் இந்த நிலைமையை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.