2020 ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பாராளுமன்றம் அன்றை தினம் இரவு 8.00 மணி வரை நடைபெறுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான தெரிவு குழு நேற்று (09) தீர்மானித்துள்ளது.

இதற்கமைவாக காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரையில்; ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் 2ஆம், 3ஆம் வாசிப்பு இடம்பெறவுள்ளது. இதனைதொடர்ந்து மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரையில் எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.

அன்றை தினம் காலை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மொழி மூலமான கேள்விகள் இடம்பெறாது. அத்தோடு இரவு நேர உணவுக்காக சபை ஒத்தி வைக்கப்படும். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட ஆவணத்தை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்பிக்கவுள்ளார்.

கொவிட் - 19 நெருக்கடியினால் வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதத்தை 11 நாட்களுக்கு வரையறுக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தின் போது ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இருப்பினும் எதிர்க்கட்சி இதற்காக முழுமையான காலம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு மற்றும் குழுநிலை விவாதத்தை நடத்தும் நாட்கள் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை. எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தில் தெரிவு குழு கூட்டத்தை நடத்தி இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்வதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, விமல் வீரவன்ச, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியல்ல, ஜயந்த கருணாதிலக்க, அனுரகுமார திசாநாயக்க, ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.