மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொருளாதாரத்திற்கு பாதிப்பில்லாத வகையிலும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.

ஆட்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நல்ல விளைவை தந்துள்ளது. இந்த நடைமுறையை தொடர்ந்தும் முறைப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய தரப்புகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நவம்பர் 09 திங்கள் காலை 5 மணி வரை நீடிப்பு…

ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்க வேண்டாம் என பொலிஸாருக்கு உத்தரவு…

வீடுகளில் மேற்கொள்ளப்படும் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு..

தனிமைப்படுத்தலுக்கு 10 நாட்களின் பின்னர் பீசீஆர் பரிசோதனை…

வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10000 ரூபா பெறுமதியான பொருட்கள்…

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களுக்கு முன்பிருந்த முறைமையின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்…

மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு கடுமையான கட்டுப்பாடு…

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான பீசீஆர் பரிசோதனை 10வது நாளில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் முடிவுகளுக்கு ஏற்ப தொற்றுக்கு உள்ளாகாதவர்களை 14 நாட்களுக்கு பின்னர் சாதாரண பொது வாழ்க்கைக்கு அனுமதிக்குமாறு  ஜனாதிபதி அவர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களுடன் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.

கொவிட் 19 தொடர்பில் அனுபவமில்லாத முன்னைய சந்தர்ப்பத்தின் போது மிகவும் சிறப்பாக மக்களை பாதுகாக்க அரசாங்கத்திற்கு முடியுமானது. அதன்போது மேற்கொள்ளப்பட்ட முறைமைகளை பயன்படுத்தி தற்போதைய நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் மேலும தெரிவித்தார்.

தொடர்ச்சியாக எழுமாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அவற்றின் முடிவுகளை குறுகிய காலத்தில் வழங்குவதற்கு முடியுமான முயற்சிகளை செய்யுமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். தனியார் வைத்தியசாலைகளிலோ அல்லது அரசின் ஊடாகவோ எந்த வகையிலும் பீசீஆர் பரிசோதனை செய்த போதும் குறித் நபர் தொடர்பான முடிவுகள் வரும் வரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவது கட்டாயமானது என்றும் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் பீசீஆர் பரிசோதனைகள் சுகாதார அமைச்சின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதன் பின்னர் தொடர்புடையவர்கள் மற்றும் அப்பிரதேசம் முடக்கப்படுவது நோய்த்தொற்று பரவுவதை தவிர்ப்பதற்கான உடனடி நடவடிக்கையாகும். அதற்கும் மேல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதன் மூலம் நோய்த்தொற்று பரவுவதை தடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் அதனை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார்.

பொருட்களை விநியோகித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டவாறு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதாக பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும், கிராம அலுவலர்களுக்கும் உள்ளுராட்சி பிரதிநிதிகளுக்கும் பொறுப்புகளை பகிர்ந்தளித்து நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன், மாதாந்தம் முதியோர் கொடுப்பனவுகள் முன்பு போன்று வீடுகளுக்கே சென்று வழங்கப்படுவதாகவும் பெசில் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10000 ரூபா பெறுமதியான பொருட்கள் பொதியொன்றினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் அமுலில் உள்ள ஊடரடங்கு சட்டத்தை தொடர்ச்சியாக நவம்பர் 09 திங்கள் காலை 5.00 மணி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவு, குருணாகல் நகர சபை எல்லை மற்றும் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவுக்கும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வழமைபோன்று ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி அவர்களினால் பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.

அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண, இராஜாங்க அமைச்சர்களான வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, வைத்தியர் சீதா அரம்பேபொல, பேராசிரியர் சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் கொவிட் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.