(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோதும் இன்றையதினம் 5 சதவீதத்திற்கும் 10 சதவீதத்திற்கும் இடையிலான மாணவர்களே வருகைத் தந்துள்ளனர். பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கு காரணமாகும் என எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் இருக்கும் நிறுவனங்ளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றையதினம் மேல்மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் உள்ள பாடசாலைகளைத் தவிர்ந்த நாடு முழுவதும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் 4ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்கின்ற சூழலில் 75 பேர்தான் பாடசாலைக்கு வந்துள்ளனர். முழு கண்டி மாவட்டத்திலும் உள்ள பாடசாலைகளில் 5 சதவீதத்திற்கும் 10 சதவீதத்திற்கும் இடையிலான மாணவர்களே வருகை தந்துள்ளனர். பாடசாலைகளில் பாதுகாப்பு வசதிகள் மிகவும் குறைவாக உள்ளமை இதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் 60 பாடசாலைகளுக்கு ஒரு சுகாதார பரிசோதகர்தான் உள்ளார். மாகாணசபை இல்லாதபடியால் ஆளுனர் ஊடாக தற்காலிகமாகவேனும் சுகாதார பரிசோதகர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று தனிமைப்படுத்தல் ஊரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மேலும் 5ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வேண்டுகோள் விடுகிறோம். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்களால் எவ்வித பணிகளையும் செய்ய முடியாதுள்ளது. வெளியிலும் செல்ல முடியாது. வாழ்வதற்கு வழிமுறையொன்று இல்லாதுள்ளனர். ஆகவே, அவர்களுக்கு மேலும் 5ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்றார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.