மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்தவர்களில் 3 பேர் இன்று (01) உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

அமைதியின்மையின் போது காயமடைந்த 117 பேர் ராகமையில் அமைந்துள்ள வட கொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் செல்டன் பெரேரா குறிப்பிட்டார்.

அவர்களில் 51 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமைதியின்மையின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த கைதிகளின் உறவினர்கள் இன்றும் ராகமை வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில் குழுமியிருந்தனர்.

இதேவேளை, மஹர சிறைச்சாலையின் பாதுகாப்பு இன்றும் பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் கைதிகளின் உறவினர்கள் இன்று சிறைச்சாலை வளாகத்தில் குழுமினர்.

மஹர சிறைச்சாலையிலிருந்து இன்று மாலையும் அம்பியூலன்கள் சில சென்றமையை அவதானிக்க முடிந்ததாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறினார்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மைக்கு முன்னதாக மன நோயாளர்கள் பயன்படுத்தக்கூடிய 21,000 மருந்து வில்லைகளை கைதிகள் பயன்படுத்தியுள்ளமை தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

இதனிடையே மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பில் விசாரணை செய்ய குசலா சரோஜினி வீரவர்தனவின் தலைமையில் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவிலிருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இராஜினாமா செய்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.