யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் முதல்வரை தெரிவுசெய்யும் விசேட அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

முதல்வர் வேட்பாளர்களாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்மொழியப்பட்டனர்.

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமாக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், முதல்வர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

வாக்கெடுப்பில் இ.ஆனல்ட்டுக்கு 20 வாக்குகளும், வி.மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் கிடைத்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலா ஒரு உறுப்பினர் என 20 உறுப்பினர்கள் இ.ஆனல்ட்டுக்கு ஆதரவாக வாக்களியுள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஒரு உறுப்பினர் என 21 உறுப்பிர்கள் வி.மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதனால் யாழ் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி யாழ்.மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகவும் சமர்பிக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டதால் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விசேட அமர்பு இன்று இடம்பெற்ற போதே வி.மணிவண்ணன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.