(நா.தனுஜா - வீரகேசரி)

கொரோனா வைரஸ் பரவலின் பின்னரான காலப்பகுதியில் சுயவிருப்பின்பேரில் இணையவழிக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த ஆசிரியர்களை (காலகன்னி) 'மிகவும் மோசமானவர்கள்' என்று வர்ணித்த அமைச்சரும் ஜனாதிபதியும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திடம் மன்னிப்புக்கோரவேண்டும்.

அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் வெளியிடப்படும் இத்தகைய கருத்துக்களின் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்திருக்கும் 'ஒழுக்கமான நாட்டின்' தரம் எத்தகையதாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளமுடிகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

தற்போதைய அரசாங்கத்தின் கடந்த ஒன்றரைவருட ஆட்சிக்காலத்தில் நாட்டின் அனைத்துத்துறைகளும் பாரிய வீழ்ச்சிக்கு முகங்கொடுத்திருப்பதை அவதானிக்கமுடிகின்றது.

இப்போது நாடு அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளிலும் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைநோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

குறிப்பாக பல்வேறு அத்தியாவசியப்பொருட்களுக்கும் நிர்ணய விலையைத் தீர்மானித்திருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் சந்தையில் நிர்ணயவிலைகளையும் விட அதிகமான விலைக்கே பொருட்கள் விற்பனைசெய்யப்படுகின்றன.

ஆனால் மறுபுறம் பொதுமக்கள் அன்றாட வருமானத்தை உழைத்துக்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சில தனியார் நிறுவனங்கள் இப்போதும் தமது ஊழியர்களுக்கு சம்பளத்தின் ஐம்பது சதவீதத்தையே வழங்கி வருவதாகவம் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.