கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூலையில் 5.7 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 6.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 11.0 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 11.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 3.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூலையின் 4.2 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 4.3 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றமானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக 2021 ஓகத்தில் 0.28 சதவீதத்தினைப் பதிவுசெய்தது. மேலும், உணவு மற்றும் உணவல்லா வகைகளின் மாதாந்த மாற்றங்கள் முறையே 0.21 சதவீதத்தினையும் 0.06 சதவீதத்தினையும் பதிவுசெய்தன. அதற்கமைய, உணவு வகையினுள் உடன் மீன், உடன் பழங்கள், சீனி மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் அதிகரித்த அதேவேளை, அரிசி மற்றும் தேய்காய் விலைகள் வீழ்ச்சிகளைப் பதிவுசெய்தன. நலம் (தனியார் வைத்தியசாலைகளுக்கு/ மருத்துவ நிலையங்களுக்கான கொடுப்பனவுகள்) மற்றும் தளபாடம், வீட்டுச்சாதனங்கள் மற்றும் வழமையான வீட்டுப் பராமரிப்பு துணை வகைகளில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக மாத காலப்பகுதியில் உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்பொன்றினைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தினை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூலையின் 3.7 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 4.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. மேலும், ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 யூலையின் 3.1 சதவீதத்திலிருந்து 2021 ஓகத்தில் 3.2 சதவீதத்திற்கு சிறிதளவு அதிகரித்தது.

அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.