இலங்கையின் தமிழ் இலக்கியத்தின் சிகரம் - அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் (றஹிமஹுல்லாஹ்)



இலங்கையில் தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த புலவர்கள் வரிசையில் மிக முக்கியமானவராக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் விளங்குகின்றார். 19ஆம் நுாற்றாண்டு என்பது இலங்கையில் சமய,கல்வி மற்றும் சமூக ரீதியான மறுமலர்ச்சிக்குரிய காலம் என்று அடையாளப்படுத்த முடியும். அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் 19ஆம் நுாற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20ஆம் நுாற்றாண்டின் ஆரம்பப்பகுதியிலும் வாழ்ந்தார்கள்.

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் கி.பி. 1866ஆம் ஆண்டு கண்டியின் தெல்தோட்டை நகரின் போப்பிட்டியில் அல்லாப்பிச்சை ரவுத்தர் அவர்களுக்கும், ஹவ்வா உம்மா அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார்கள். இவர்களின் தந்தையான அல்லாப்பிச்சை ராவுத்தர் அவர்கள் இந்தியாவின் திருப்புத்துார்  என்ற இடத்தை சேரந்தவர்கள் என்பதுடன், பிற்காலத்தில் கண்டி-தெல்தோட்டை நகரின் போப்பிட்டியவில் குடியேறியவராவார். இவர்களின் தாயாரான ஹவ்வா உம்மா அவர்கள் கண்டி அரசனிடம் அரசவையில் வைத்தியராகப் பணிபுரிந்து, வெத முகாந்திரம் என்ற பட்டத்தைப் பெற்றிருந்த மாமு நெய்னார் என்பவரின் வழித்தோண்றலில் வந்தவர்கள் ஆவார்கள். 

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியை போப்பிட்டியவில் அமைந்திருந்த மத்ரஸாவிலும், தமிழ் வித்தியாலயத்திலும் பெற்றுக்கொண்டார்கள். பின்னர் கண்டி டுவினஸ் (குவின்ஸ்) அகடெமியிலும் (தற்போதைய கண்டி திருத்துவக்கல்லுாரி -Trinity College) கற்றார். பின்னர், தென்னிந்தியாவுக்கு சென்ற இவர்கள், திருப்புத்துார் தமிழ் வித்தியாசாலையில் உயர்கல்வியைப் பெற்றுக் கொண்டார்கள்.  வித்தியாசாலையின் பிரதம உபாத்தியாரான வித்துவசிரோமணி முத்துபாவப் புலவரிடம் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்றுக்கொண்டார்கள். 


அப்துல் காதிர் புலவர் அவர்கள் தனது 11ஆவது வயதிலயே பாடல்களைப்பாடும் திறமையைப் பெற்றுக்கொண்டார்கள். கி.பி 1888ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இலக்கிய விழாவில் அப்துல் காதிர் புலவர் கலந்துகொண்டார்கள். அந்நிகழ்வில் பல அறிஞர்களும், கவிஞர்களும் கலந்துகொண்டனர். இவ்விழாவின் இறுதி நிகழ்விற்கு தமிழகத்தில் இருந்து வருகைதந்த வித்துவ சிரோன்மணி அம்பலவாணர் கவிரயாரின் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. அக்கவியரங்கிலே 16 வயதுடைய இளைஞனான அப்துல் காதிர் புலவர் அவர்கள், "அட்டகிரி எட்டையும் பந்தாகவே யுருட்டி அம்பலம் முன்னில் வைப்பேன்" என ஆரம்பிக்கும் கவிதையை பலர் முன்னிலையிலும் பாடி "அருள்வாக்கி" என்ற பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.  அப்துல் காதிர் புலவர் அவர்களின் பெரும்பாலும் அனைத்துவிதமான ஆக்கங்களும் இஸ்லாமிய அடிப்படையையும், வரலாற்றையும் மற்றும் இறையருள் பெற்ற இறைநேசர்களுடைய சிறப்புகளையும் மையமாக வைத்துப் படைக்கப்பட்டவையாகும். அக்காலப்பபகுதியில் இறையருளுக்கு ஆட்பட்ட தலைசிறந்த புலவர்கள் அவதானம் செய்வது வழக்கமாகும். 

இது அவர்களுடைய மன வலிமையையும், நினைவாற்றலையும், அகத்தெளிவையும் புலப்படுத்தும். இக்கலையில் அப்துல் காதிர் புலவர் அவர்களும் சிறந்து விளங்கினார்கள். அப்துல் காதிர் புலவர் அவர்கள் மூன்று முறை அட்டாவதானத்தையும், ஒரு முறை தீபசக்தியையும் செய்துகாட்டியுள்ளார்கள்.

அட்டாவதானம் என்பது எட்டுச்செயல்களை தொடர்ந்தும், ஒன்றுமாறியொன்றாகவும் பலர் முன்னிலையில் செய்துகாட்ட வேண்டிய நிகழ்வாகும். 

இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் முன்னோடிகளில் மிக முக்கிய ஒருவரான அறிஞர் சித்திலெப்பை அவர்களுக்கும், அப்துல் காதிர் புலவர் அவர்களுக்கும் இடையில் தொடர்புகள் இருந்தது. அறிஞர் சித்திலப்பை அவர்கள் முஸ்லிம்களுக்கான பாடசாலைகளை அமைத்து, இலங்கை முஸ்லிம்களின் கல்வித் துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்கள். அதேவேளை, அப்துல் காதிர் புலவர் அவர்களும் திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்கள். இத்திண்ணைப் பள்ளிக்கூடமே பிற்காலத்தில் தெல்தோட்டை புலவர் மலையிலிருக்கும் வித்துவதீப மகாவித்தியாலயமாக வளர்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

அறிஞர் சித்திலெப்பை அவர்கள் ஞானதீபம் மற்றும் அஸ்றாருல் ஆலம் போன்ற படைப்புக்களால் இஸ்லாமிய மெய்ஞ்ஞான, தஸவ்வுப் கோட்பாடுகளை விளக்கினார். அறிஞர் சித்திலெப்பை அவர்களின் "அஸ்றாருல் ஆலம் (பிரபஞ்சத்தின் இரகசியங்கள்)" என்ற நுாலுக்கு கண்டனங்கள் எழுந்தன. அக்கண்டனங்களுக்கு எதிராகவும், அறிஞர் சித்திலப்பை அவர்களை ஆதரித்தும் அப்துல் காதிர் புலவர் அவர்கள் பிரசங்கங்களைச் செய்தார். இந்தியாவின் காயல்பட்டணத்தைச் சேர்ந்த காதிரிய்யா வழியமைப்பின் செய்ஹாக இருந்த காயல்பட்டிணம் தைக்கா ஸாஹிப் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் மகனான அஷ்செய்கு முஹம்மத் ஸாலிஹ் வலீயுல்லாஹ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களின் பிரதான கலீபாவாகிய பாசிப்பட்டிணம் செய்கு ஷாஹுல் ஹமீத் ஆலிமுல் காதிரிய்யீ (றஹிமஹுல்லாஹ்) அவர்களது "தன்பீஹுல் முரீதீன்" என்ற நுால் அப்துல் காதிர் புலவர் அவர்களால் உரைநடையில் எழுதப்பட்டது.  

அறிஞர் சித்திலெப்பை அவர்களின் அஸ்றாருல் ஆலம் நுாலுக்குப் பின்னர், இலங்கையில் இஸ்லாமிய மெய்ஞானம் தொடர்பாக உரைநடையில் வெளிவந்த மிக முக்கிய நுாலக "தன்பீஹுல் முரீதீன்" காணப்படுவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னால் மெய்யியல்துறை தலைவர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

16ஆம் நுாற்றாண்டில் தென்னிந்தியாவில் போர்த்துக்கேயருக்கு எதிராக போராடியவரும், போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வேளையில் இந்தியத்துணைக் கண்டத்திலும், இலங்கையிலும் புனித இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக உழைத்தவரும், மாபெரும் மெய்ஞானியுமான நாகூர் சாகுல் ஹமீத் மீரான் ஸாஹிப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களால் இலங்கையின் மத்திய பகுதிக்கு இஸ்லாமிய பிரச்சாரப் பணிக்காக ஷாம் சிஹாப்புத்தீன் வலீயுல்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) நியமிக்கப்பட்டார்கள்.

 அக்காலப் பகுதியில் இலங்கையின் மத்திய பகுதியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட ஷாம் சிஹாப்புத்தீன் வலீயுல்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது மரணத்திற்கு பின்னர் கண்டி மீரான் மகாம் பள்ளிவாசலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டார்கள். 

அப்துல் காதிர் புலவர் அவர்கள், ஷாம் சிஹாப்புத்தீன் வலீயுல்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) பேரில் கண்டிப்பதிற்றுப்பத்தந்தாதி , அருண்மணி மாலை போன்ற கவிதை நுால்களை இயற்றியுள்ளார்கள். ஷாம் சிஹாப்புத்தீன் வலீயுல்லாஹ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது தர்கா வித்துவானாகவும் அப்துல் காதிர் புலவர் அவர்கள் இருந்தார்கள்.  

யாழ்ப்பாணம் அசனாலெப்பை புலவர் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய "மஹ்ளரதுல் ஐதறுாசிய்யா" மக்காமில் 1912ஆம் ஆண்டு அப்துல் காதிர் புலவர் அவர்கள் இஸ்லாமிய சன்மார்க்க இலக்கியங்கள் பற்றி மூன்றுவாரகாலம் கலந்துரையாடலுடன்கூடிய பிரசங்கம் ஒன்றை நடத்தினார்கள். இந்நிகழ்வில் முஸ்லிம் பொதுமக்களும் பல தமிழ் அறிஞர்களும் கலந்துகொண்டனர். பிரசங்கத்தின் நிறைவின் போது சபாநாயகர் சு.மு. அசனாலெப்பை புலவர் அவர்கள் வாழ்த்துரை செய்து "வித்துவதீபம்" என்ற பட்டத்தை அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்களுக்கு வழங்கி வைத்தார்கள். 

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் 1918ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி, தனது 52ஆவது வயதில் வபாத்தானார். அவர்கள் கண்டி மஹியாவை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். 

அப்துல்காதிர் புலவர் அவர்கள் தமிழ் இலக்கியத்திற்கு பங்களிப்புச் செய்த மிக முக்கிய ஈழத்து அறிஞராகக் கருதப்படுகின்றார்கள. அவர்கள் ஏறத்தாள 30 நுாற்களை எழுதியுள்ளார்கள். இவர்களது தமிழ் புலமையைக் கண்ட அறிஞர்கள் அருள்வாக்கி , உலகதீபம், முத்தமிழ் சிங்கம், வித்துவதீபம் போன்ற பல சிறப்புப் பெயர்களை வழங்கி கெளரவித்தார்கள். 

அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொணர்வதில் முக்கியமானவராக ஓய்வுபெற்ற கல்வி அதிகாரி எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்கள் செயற்பட்டார்கள். 1965ஆம் ஆண்டு அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பிறந்த நுாற்றாண்டு விழாவை அவர்களது சொந்த ஊரிலேயே கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்தார். 1973ஆம் ஆண்டு  எஸ்.எம்.ஏ. ஹஸன் அவர்கள் அருள்வாக்கி அப்துல்காதிர் என்ற தலைப்பில் ஆய்வுநுாலை வெளியிட்டார். அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் அவர்களின் நினைவு நுாற்றாண்டான 2018ஆம் ஆண்டு ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை தமது 217ஆவது இதழை அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நுாற்றாண்டு சிறப்பிதழாக வெளியிட்டது. இச்சிறப்பிதழ் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் 12 நுால்களை உள்ளடக்கியுள்ளமை சிறப்பம்சமாகும். 

குறிப்பு: ஞானம் சஞ்சிகையின் அப்துல் காதிர் புலவர் நுாற்றாண்டு சிறப்பிதழ் நுாலகம் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. கீழுள்ள இணையதளத்தில் அச்சஞ்சிகையை பதிவிறக்கம் செய்து, ஆர்வமுள்ளவர்கள் வாசிக்கலாம்.

https://noolaham.net/project/555/55407/55407.pdf

உசாத்துணைகள்:

1.  ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை 217 (ஜுன், 2018) - அப்துல் காதிர் புலவர் நுாற்றாண்டு சிறப்பிதழ்

2.  உலகத் தமிழ் இஸ்லாமிய இலக்கிய மாநாடு சிறப்பு மலர் (2002). ' இறைவாக்கு பெற்ற அருள்வாக்கி : பாவலர் சாந்தி முஹைதீன் ' 

தொகுப்பு - இப்ஹாம் நவாஸ் (Ifham Nawas)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.