2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (10) மாலை 5 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறுவது 28 நாட்களாக இடம்பெற்ற நீண்ட விவாதங்களின் பின்னராகும்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால் வரவு - செலவுத்திட்ட அறிக்கை கடந்த நவம்பர் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதம் கடந்த மாதம் 13 ஆம் திகதி முதல் ஆரம்பமானதுடன், அது ஏழு நாட்களாக நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதம் நவம்பர் 22 முதல் ஆரம்பமானது.
வரவு - செலவுத் திட்டத்திற்கான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் சகலருக்கும் இன்றைய தினம் கொழும்பில் இருக்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் அவர்களுடைய எம்பிக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வரவு - செலவுத்திட்டத்திற்கான இறுதி வாக்கெடுப்பு நடைபெறுவதால் இன்றைய தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படும் என்று பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
இது தவிர பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்கள் கடந்த மூன்று நாட்களாக வரவு - செலவுத்திட்ட விவாதங்களை பகிஷ்கரிப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)