21.03.2022 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம், தமிழ் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)

01. முதலீட்டு ஊக்குவிப்புக்கள் தொடர்பான அமைச்சரவைக் குழுவொன்றை நியமித்தல்

அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தேசிய ரீதியாக முன்னுரிமையளிக்கப்படும் துறைகளை அடையாளங்கண்டு, அதற்கு ஏற்புடைய துறைகளில் முதலீட்டு வாய்ப்புக்களை இனங்கண்டு ஊக்குவிப்பதற்குத் தேவையான கொள்கை ரீதியானதும், நடைமுறை சாத்தியமானதுமான தீர்வுகளை வழங்குமுகமாக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் தலைமையில், கௌரவ பிரதமர் உள்ளிட்ட ஏற்புடைய அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுடன் கூடிய 'முதலீட்டு ஊக்குவிப்புக்கள் தொடர்பான அமைச்சரவைக் குழு' வினை நியமிப்பதற்காகவும், குறித்த அமைச்சரவைக் குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஜனாதிபதி செயலாளரின் தலைமையில் குறித்த அமைச்சுக்கள் மற்றும் இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் ஏனைய ஏற்புடைய அலுவலர்களுடன் கூடிய உத்தியோகத்தர்; குழுவொன்றை நியமிப்பதற்காகவும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்;ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. புத்தாக்க முறைமையை பலப்படுத்தல்

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒத்துழைப்புடன் 2018 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் முன்னணி சமூக ஆராய்ச்சி நிறுவனமான 'சிற்ரா ( Citra ) நிறுவனம்' தாபிக்கப்பட்டுள்ளது. சிற்ரா ( Citra ) புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனம் கடந்த காலங்களில் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் பங்காளர்களுடன் ஒத்துழைப்புடன் செயலாற்றி, குறிப்பிடத்தக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கமைய, கடந்த காலங்களில் பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் பங்களிப்புடன் சிற்ரா (

Citra ) புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, 'சிற்ரா புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனம் ( Citra ) உலகில் ஏனைய நாடுகளைப் போலவே பிரதமர் அலுவலகத்தின் நேரடி வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் கருத்திட்டமாக தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்கும், அதற்காக பிரதமரின் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியின் இயக்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கருத்திட்ட நிர்வாக இயக்கச் சபையொன்றை உருவாக்குவதற்காகவும் கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. 'உள்ளடக்கப் பொருளாதார விருத்திக்கான திறன்கள்' ( Skills for Inclusive Growth – S4IG ) கருத்திட்டத்தின் இரண்டாவது கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து முன்மொழிந்துள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடல்

அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் 2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய, எமது நாட்டில் சுற்றுலாத்துறையின் பெறுமதி சேர்க்கைகளை மேம்படுத்துவதற்காகவும், சுற்றுலாத்துறையில் தொழில் முயற்சிகளை அதிகரிப்பதையும் நோக்காகக் கொண்டு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவித்திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்றுள்ள 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியனுசரணையின் 'உள்ளடக்கப் பொருளாதார விருத்திக்கான திறன்கள்' ( Skills for Inclusive Growth – S4IG ) கருத்திட்டம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் 04 வருடங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அக்கருத்திட்டத்தின் முதலாம் கட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 12 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. கருத்திட்டத்தின் முதலாம் கட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட 04 மாவட்டங்களுக்கு மேலதிகமாக அநுராதபுரம் மற்றும் மாத்தளை போன்ற மாவட்டங்களையும் இரண்டாம் கட்டத்தில் இணைத்துக்கொண்டு குறித்த கருத்திட்டத்தை 2024 ஆம் ஆண்டு வரைக்கும் நடைமுறைப்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. விவசாய இயந்திரவியல் விஞ்ஞானம் பற்றிய சீன அகடமி ( China Academy of Agriculture Mechanization Science – CAAMS ) மற்றும் விவசாய திணைக்களத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடல்

விவசாய இயந்திரவியல் துறையில் ஒத்துழைப்புக்கள் தொடர்பாக விவசாய இயந்திரவியல் விஞ்ஞானம் பற்றிய சீன அகடமி (

China Academy of Agriculture Mechanization Science – CAAMS ) மற்றும் விவசாயத் திணைக்களத்திற்கும் இடையில் 2017 ஆம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலம் தற்போது முடிவடைந்துள்ளமையால், இருதரப்புக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் விவசாய இயந்திரோபகரணங்கள் தொடர்பான மாதிரிக் கிராமங்களை உருவாக்கல், விவசாய இயந்திரோபகரணங்கள் தொடர்பான விசேட நிபுணத்துவங்களை பரிமாற்றிக் கொள்ளல், பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துதல், விவசாய இயந்திரோபகரணங்கள் பற்றிய மாதிரி நிலையங்களை அமைத்தல் மற்றும் விவசாய இயந்திரவியல் தொடர்பான கூட்டு ஆராய்ச்சிகளை நடாத்துதல் போன்ற துறைகள் தொடர்பாக ஒத்துழைப்புக்களுடன் செயற்படுவதற்கு இருதரப்பும் எதிர்பார்த்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இருதரப்புக்களும் கையொப்பமிடுவதற்காக விவசாய அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்

இலங்கை மற்றும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பிடுவதற்காக 2019 யூலை மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், குறித்த ஒப்பந்தம் இதுவரை கையொப்பமிடப்படவில்லை. அதனால், விமான சேவை நடவடிக்கைகள் தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் குறித்த விமான சேவைகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் இத்தாலி குடியரசுக்கம் இடையிலான தண்டனைகள் விதிக்கப்பட்ட குற்றவாளிகளை ஒப்படைத்தலுக்கான ஒப்பந்தம்

இலங்கை நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ள திட்டவட்டமாக குறித்துரைக்கப்பட்டுள்ள வேற்று நாட்டு பிரஜை ஒருவர், குறித்த தண்டனையை அந்நபர் தனது பிரஜாவுரிமை கொண்ட நாட்டில் அனுபவிப்பதற்கு ஏற்ற வகையில் குறித்த நாட்டிடம் ஒப்படைப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அதேபோல் வேற்று நாடுகளில் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை எமது நாட்டுக்கு ஒப்படைக்கும் சட்ட ஏற்பாடுகளும் குறித்த சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய செயலாற்றுவதற்காக இருதரப்புக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்வதற்கான இலங்கை மற்றும் குறித்த நாட்டுடன் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டிருத்தல் அவசியமாகும். அதற்கமைய, இலங்கை அரசும் இத்தாலி அரசுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு உறுதிப்பத்திர வாடகை வீட்டுத்திட்ட முறையொன்றை நடைமுறைப்படுத்தல்

காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் 'உறுதிப்பத்திர வாடகை வீடு' எனும் பெயரில் முன்மொழிவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு, கட்டுமானங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழிற்றுறை ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் 04 மாடிகளுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கும், முதலாம் கட்டத்தின் கீழ் மாகாண மட்டத்தில் 464 வீடுகளுடன் கூடிய 09 வீடமைப்புத் தொகுதியை நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்படும் பயனாளிகளுக்கு ஆரம்பக் கொடுப்பனவை செலுத்துவதற்கான இயலுமை இன்மையால், மாதாந்தம் 15,000ஃ- ரூபா வாடகைப் பணமாக 31 வருடங்களுக்கு அறவிடுவதற்கும், இரண்டாவது அல்லது மூன்றாவது பரம்பரைக்கு வீட்டு உரிமையை ஒப்படைக்கக் கூடிய வகையிலும், எந்தவொரு காரணத்திற்காகவும் வீட்டை விற்பனை செய்வதற்கு இயலாத வகையிலும் பயனாளிகளுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 2022 ஆம் ஆண்டுக்கான அரச மருத்துமனைகள் உள்ளிட்ட ஏனைய சுகாதார நிறுவனங்களுக்குத் தேவையான சத்திரசிகிச்சை தொற்று நீக்கித் துணி ( Surgical Gauze ) கொள்வனவு செய்வதற்கான பெறுகையை வழங்கல்

அரச மருத்துவமனைகளில் சிகிச்சைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளுக்குத் தேவையான அறுவைத் தொற்று நீக்கியான சத்திர சிகிச்சைத் துணி ( Surgical Gauze ) ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக கொள்வனவு செய்ய வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய, மருத்துவ விநியோகப் பிரிவுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான சத்திரசிகிச்சை தொற்று நீக்கித் துணி 30 மில்லியன் மீற்றர்கள் தேவைப்படுகின்றமை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மீற்றர் 30.55 மூபா வீதம் பதிவு செய்யப்பட்ட 407 விநியோகத்தர்களிடம் குறித்த சத்திரசிகிச்சை தொற்று நீக்கித் துணியைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழு பரிந்துரைத்துள்ளது. குறித்த பரிந்துரைகளுக்கமைய குறித்த விநியோகத்தர்களுக்கு பெறுகையை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

09. கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

தொழில் வழங்குநரால் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளை மீறல் மற்றும் ஊழியர்களுக்கு உரித்தான நியதிச்சட்ட உரித்துக்களை அறவிட்டு வழங்கல் போன்ற குறுகிய காலத்தில் தீர்வு காணக்கூடிய வழக்குகள் அதிகமாக நீதவான் நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ளது. அதுதொடர்பான தீர்ப்புக்களை வழங்குவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை தெரியவந்துள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் தொடரப்படும் வழக்குகளைத் துரிதமாகத் தீர்ப்பதற்காக நீதவான் நீதிமன்றத்திற்கும், தொழில் நியாய சபைக்கும் சமமான நீதிமன்ற அதிகாரம் கிடைக்கும் வகையில் கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் தொழில் அமைச்சர்; அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. அபாயகர விலங்குகள் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

அபாயகர விலங்குகள் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்கு சட்;டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது. அதற்கமைய, அபாயகர விலங்குகள் (திருத்தப்பட்ட) கட்டளைச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர்; அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்;டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர்; அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்

வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதுடன், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தில் திருமணத்தைப் பதிவு செய்வதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டியதுடன், வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலுக்கான ஏற்பாடுகள் குறித்த கட்டளைச் சட்டத்தில் உள்வாங்கப்படாமையால், திருமணப் பதிவுக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்கும், அதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நீதி அமைச்சர்; அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. இரத்துச் செய்ய இயலாத கொடை வழங்கல் காணிப் பத்திரங்கள் மோசமான நன்றி கெடுதலின் பிரகாரம் இரத்துச் செய்தல் சட்டத்திருத்தம் செய்தல்

இரத்துச் செய்ய இயலாதவாறான தமது சொத்துக்களைப் கொடையாக வழங்கும் காணி வழங்குநர்களால் தமது சொத்துக்களில் வழங்கும் கொடைகளைப் பெறுநர்கள் இருக்கும் போது மற்றும் கொடையைப் பெறுபவர்கள் மோசடியாக குறித்த சொத்துக்களை மூன்றாம் தரப்பினருக்கு மாற்றி வழங்கும் போது, அதற்கான சட்ட உதவிகளுக்கான ஏற்பாடுகளை உள்வாங்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக தேவையான ஏற்பாடுகளை வகுத்து 2017 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க இரத்துச் செய்ய இயலாத கொடை வழங்கல் காணி பத்திரங்கள் மோசமான நன்றி கெடுதலின் பிரகாரம் இரத்துச் செய்தல் சட்டத்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர்; அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுதல்

இலங்கையில் சமுத்திர மீட்புப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு நிலையத்தை நிறுவுவதற்காக 06 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய குறித்த உதவித்தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசுக்கும் மற்றும் இந்திய அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், குறித்த நிலையத்தை நிறுவுவது தொடர்பான இலங்கை அரசுக்கும் இந்தியாவின் பாரத் இலக்ரோனிக்ஸ் கம்பனிக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

15. இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசின் நிதியுதவியைப் பெற்றுக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக இருதரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதுடன், குறித்த புரிந்துணர்வு ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு தொழிநுட்ப அமைச்சராக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

16. இலங்கை மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

பரஸ்பர உடன்பாடுகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒத்துழைப்பு வழங்குவதற்கு இந்திய அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, பருத்தித்துறை, பேசாலை, குருநகர், பலப்பிட்டிய மற்றும் ஏனைய பரஸ்பர உடன்பாடுகள் எட்டப்படும் இடங்களில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இருநாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.