நாட்டுக்குள் நேற்று வந்துள்ள எண்ணெய்த் தாங்கி கப்பலிலிருந்து 37,300 மெற்றிக் தொன் டீசல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

எரிபொருளை விநியோகிப்பதற்காக முக்கியத்துவமளிக்க வேண்டிய நிறுவனங்கள் உள்ளடங்கிய பட்டியலொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதன்படி 8,000 மெற்றிக் தொன் டீசலை மின்சார சபைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும்   தெரிவித்தார்.

அத்துடன் எரிபொருள் பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பட்டியலின்படி இலங்கை போக்குவரத்து சபை, ரயில்வே திணைக்களம், மின்சார சபை, சுதந்திர வர்த்தக வலயம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வழமையாக இலங்கை போக்குவரத்து சபைக்கு மூன்றரை இலட்சம் மற்றும் நான்கு இலட்சம் லீற்றருக்கு இடைப்பட்ட அளவு எரிபொருள் வழங்கப்பட்டு வந்தன. 

இம்முறை அதனை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தனியார் பஸ்கள் மற்றும் சுற்றுலாத் துறையுடன் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கும் அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 8,000 மெற்றிக் தொன் டீசல் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளது.

கப்பலிலிருந்து எரிபொருளை இறக்கும் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமாகின. கப்பலிலிருந்து இறக்கப்படும் எரிபொருளை முத்துராஜவெலயிலுள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய தொகுதியில் களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் அந்த 37,300 மெற்றிக் தொன் எரிபொருளை இறக்குவதற்கு நான்கு நாட்கள் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மேலும் 37,300 மெற்றிக்தொன் எரிபொருளுடன் கப்பலொன்று நேற்று மாலை நாட்டுக்கு வரவிருந்தது. அந்த கப்பலிலிருந்து எரிபொருளை இறக்குவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தக் கப்பலில் 28,300 மெற்றிக் தொன் டீசலும், 9,000 மெற்றிக் தொன் விமானங்களுக்கான எரிபொருளும் உள்ளடங்குவதாக தெரிவித்த அவர், அந்த எரிபொருள் மாதிரிகள் நேற்று மாலையே பரிசோதனைக்கு உட்படுத்தப்படவிருந்ததாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்காக நேற்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததைக் காணமுடிந்தது. போதிய எரிபொருள் இல்லாமை காரணமாக மின் துண்டிப்பு செயற்பாடுகள் நேற்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.