(அர்கம் முனீர்)

இந்த நாடு தற்போது அடைந்துள்ள அதள பாதாள வீழ்ச்சிக்கு நேரடியாக காரணமான இந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து 8 ஆவது நாளாக போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 

போராட்டத்தை தோல்வியுறச் செய்ய ராஜபக்ஷக்கள் எடுத்த அனைத்து முயற்சியும் தோல்வியடைந்துள்ள நிலையில் ராஜபக்ஷக்கள் எடுத்துள்ள கடைசித்துரும்புதான் இந்த 'பிரித்தாளும் தந்திரம்'. 

ஏற்கனவே இனரீதியாக பிளவு படுத்த முற்பட்ட முயற்சி படுதோல்வியில் முடிந்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம் என்று போராட்டக்காரர்களுக்கு இடையில் எங்களை பேச்சுவார்த்தையில் பிரிதிநிதித்துவப்படுத்த யார் பொருத்தம் என்ற பிரச்சினையை கிளப்ப எடுத்த முயற்சியும் படுதோல்வியடைந்தது. 

ஆனால் தற்போது அவர்கள் அதே பிரித்தாளும் தந்திரத்தில் புதியதொரு யுத்தியைக் கையாள்கின்றனர். அதுதான் போராட்டத்தின் பங்குதாரர்கள் குறித்த விருப்புவெறுப்பைத் தூண்டிவிடுவது.

இந்த போராட்டத்தை எடுத்துக்கொண்டால் இந்தப் போராடத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே இதன் பல்வகைமை தான். இந்த போராட்டத்தில் Ratta, Sannasgala, Motivation Appachchi, சட்டத்தரணிகள், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சோசலிச இளைஞர் ஒன்றியம், ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள் மற்றும் கட்சி அரசியலை முற்றாக வெறுக்கும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இதன் பங்குதாரர்களாக உள்ளார்கள். அதன் அர்த்தம், Motivation Appachchi வையோ அல்லது Sannasgala வையோ பிடிக்காதவர்கள்/அவர்களின் கருத்தோடு முரண்படுபவர்களும் அவ்விருவரோடு கைகோர்த்து பொது குறிக்கோள்களுக்காக போராடுகிறார்கள். இந்த ஒற்றுமையை அரசாங்கம் தனக்கெதிரான ஒரு 'பாரிய அச்சுறுத்தாக' பார்க்கிறது. 

இதனை உடைப்பதற்கான தற்போது பல வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சன்னஸ்கலவை விமர்சித்து வரும் பல பதிவுகளை போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் பலர் அதனைப் பகிர்வதனை அவதானிக்க முடிகிறது. சன்னஸ்கலவை அல்லது மோட்டிவேசன் அப்பச்சியை அரசாங்கம் வாங்கிவிட்டது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டால் அதனை நம்பும் நிலைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தி போராட்டத்தை hijack செய்ய முற்படுகின்றது என்று செய்தியைப் பரப்பினால் அதனை Rasika Jayakody மற்றும் Motivation Appachchi போன்றோரே நம்பிக்கொண்டு அதற்கு எதிராக கருத்துத் தெரிவிக்கின்றார்கள். அதனை தேசிய மக்கள் சக்தியை விமர்சிப்பவர்கள் பரவலாக பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அதன் பின்னர் Motivation Appachchi யை யாராவது விமர்சித்தால் அதனை தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் சிலர் பகிர்கின்றனர். 

இது எங்கு கொண்டுபோய் முடிக்கப்போகிறது என்றால் இவ்வளவு நாளும் ஒற்றுமையாக பொதுக்குறிக்கோளுடன், அதாவது கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும், மஹிந்த ராஜபக்ஷ உட்பட அனைத்து ராஜபக்ஷக்களும் பதவி விலக வேண்டும் மற்றும் இவர்கள் ஊழல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்கப்பட வேண்டும் என்பவற்றை முன்னிறுத்தி போராடும் அனைவரையும் சிறு சிறு குழுக்களாக முதலில் சிந்தனைரீதியாக பிளவு படுத்தி, பின்னர் தனித்தனியாக ஒவ்வருவரையும் இலக்கு வைக்கவும் போராட்டத்தை முழுமையாக தோல்வியுறச் செய்யவுமே வழிவகுக்கும். 

அதேபோன்று இந்தப் போராட்டத்தை அரசாங்கம் வன்முறையைப் பயன்படுத்தி ஒடுக்குமா என்று சிலர் பயப்படுகின்றனர். அவர்களுக்கு சொல்லமுடியுமான ஒரே செய்தி அதனை சட்ட ஆட்சியை உத்தரவாதப்படுத்த போராடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமையில் சட்டத்தரணிகள் மற்றும் சட்டமாணவர்கள் அனைவரும் அவ்வாறு வன்முறையைப் பிரயோகிப்பதை நடக்க விடமாட்டார்கள் என்பதே. ஆகவே நீதியான முறையில் வன்முறை எதையும் கையாளாமல் போராட்டத்தை தைரியமாக மேற்கொள்ளுங்கள். 

ஆகவே தயவு செய்து போராட்டத்தில் ஈடுபடுவர்கள் இவற்றை கருத்திற்கொண்டு, எந்தவித ஆதாரமுமில்லாத கட்டுக்கதைகளை நம்பி எமது விருப்பு வெறுப்புக்களை முன்னிறுத்தி போராட்டத்தை தோல்வியுறச் செய்ய நாமே காரணமாக அமைந்துவிடாமல் இப்போராட்டத்தை வெற்றிப்பாதைக்கு ஒற்றுமையாக இட்டுச் செல்வோம். 

மக்கள் போராட்டம் வெற்றிபெறட்டும்! ❤

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.